For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பண்ணாரி அம்மன் கோயிலில் விமரிசையான நடைபெற்ற குண்டம் திருவிழா!

09:49 AM Mar 26, 2024 IST | Web Editor
பண்ணாரி அம்மன் கோயிலில் விமரிசையான நடைபெற்ற குண்டம் திருவிழா
Advertisement

சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோயிலில் குண்டம் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.  இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Advertisement

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் உள்ள வனப்பகுதியில் பிரசித்தி
பெற்ற பண்ணாரி அம்மன் கோயில் உள்ளது.  சுற்றுலா தலமான இக்கோயிலுக்கு ஈரோடு,
திருப்பூர்,  கோவை,  நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்தும்,  அண்டைமாநிலமான
கர்நாடகாவிலிருந்தும்  பக்தர்கள் தினந்தோறும் வந்து செல்கின்றனர்.   இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாத குண்டம் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

இத்திருவிழாவில் லட்சக்கணக்காண பக்தர்கள் நாள்கணக்கில் வரிசையில் காத்திருந்து தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்துவர்.  அந்த வகையில் இந்த ஆண்டுக்கான குண்டம் திருவிழா மார்ச் 11 ஆம் தேதி பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.  இதனைத் தொடர்ந்து மறுநாள் (மார்ச்.12) இரவு அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்மன் திருவீதி உலா தொடங்கி,  பவானிசாகர், சத்தியமங்கலம் உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட கிராமங்களில் நடைபெற்றது.

பின்னர் மார்ச் 19 ஆம் தேதி இரவு அம்மன் சப்பரம் கோயிலை வந்தடைந்தது.  இதனைத் தொடர்ந்து அன்று இரவு நிலக்கம்பம் சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.  மேலும், நேற்று அதிகாலை 4 மணியளவில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜையும்,  அதிகாலை 5 மணியளவில் குண்டத்திற்கு தேவையான கரும்பு வெட்ட செல்லும் நிகழ்ச்சியும்,  அதிகாலை 6 மணியளவில் அம்மன் மெரவணை ஊர்வலமும் நடைபெற்றது.  பின்னர் மாலையில் குண்டத்திற்கு எரிகரும்புகள் அடுக்கும் பணியும் நடைபெற்றது .  இரவு 8 மணியளவில் குண்டத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அக்னி இடப்பட்டது.

இன்று அதிகாலை 2 மணியளவில் சகல வாத்தியங்களுடன் தெப்பக்குளம் சென்று அம்மனை அழைத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.  குண்டத்தின் முன்புறம்
அம்மன் சப்பரம் வந்து சேர்ந்தபின் குண்டத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு குண்டத்தை சுற்றிலும் கற்பூரம் ஏற்றப்பட்டு வழிபாடு நடைபெற்றது.  பின்னர் மணியளவில் பூசாரி பார்த்திபன் குண்டம் இறங்கினார்.

இதனைத் தொடர்ந்து வரிசையில் காத்திருந்த பக்தர்கள் குண்டம் இறங்க
அனுமதிக்கப்பட்டனர்.  பக்தர்கள் இன்று மதியம் 1 மணி வரை குண்டம் இறங்குவர். மதியத்திற்கு மேல் சுற்றுவட்டார பகுதி கிராமங்களை சேர்ந்த விவசாயிகள்
கால்நடைகளை குண்டத்தில் இறக்குவர்.  குண்டம் இறங்கும்போது கருவறையில் உள்ள
பண்ணாரிஅம்மன் வீணை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

குண்டம் இறங்கிய பக்தர்கள் நேரடியாக கோயிலுக்குள் சென்று அம்மனை தரிசித்தனர்.  நாளை (மார்ச்.27) மதியம் மாவிளக்கு பூஜையும்,  இரவு புஷ்பரத ஊர்வலமும் நடைபெறுகிறது.  நாளை மறுநாள் (மார்ச்.28) மஞ்சள் நீராடுதலும்,  மார்ச் 29 ஆம் தேதி மாலை சுமங்கலி பெண்கள் பங்கேற்கும் திருவிளக்கு பூஜை மற்றும் தங்க தேர் ஊர்வலமும் நடைபெறுகிறது.  ஏப்ரல் 1 ஆம் தேதி மறுபூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.  இந்த குண்டம் திருவிழாவில் தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலத்திலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags :
Advertisement