Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

அதிமுகவில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும் - சென்னை உயர்நீதிமன்றம்!

11:24 AM Dec 05, 2023 IST | Web Editor
Advertisement

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பதவியில் இருந்து தன்னை நீக்கியதை எதிர்த்து வி.கே.சசிகலா தொடர்ந்த மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

Advertisement

அதிமுக பொது செயலாளராக இருந்த ஜெ.ஜெயலலிதா மறைவிற்கு பிறகு,  கட்சியின் பொது செயலாளராக அவரது தோழி வி.கே.சசிகலாவும்,  துணை பொது செயலாளராக டி.டி.வி.தினகரனும் பொதுக்குழு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன் பின்னர் சசிகலா மற்றும் தினகரன் ஆகியோரை பதவிகளில் இருந்து நீக்கம் செய்தும், கட்சியில் ஒருங்கிணைப்பாளர்,  இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கியும் கடந்த 2017ம் ஆண்டு நடந்த அதிமுக பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதனை அடுத்து,  தன்னை நீக்கிய தீர்மானத்தை ரத்து செய்யக் கோரி சசிகலா சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை எதிர்த்து சசிகலா சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன் மற்றும் என்.செந்தில்குமார் முன்பு
விசாரணைக்கு வந்த போது,  சசிகலா தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபாலன்
ஆஜராகி,  தன்னை இடைக்கால பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியது
சட்டவிரோதமானது என தெரிவித்தார்.

அப்போது நீதிபதிகள்,  இடைக்கால பொதுச்செயலாளர் என்ற பதவி அதிமுகவில்
இருக்கிறதா? அதற்கு விதிகள் இருக்கிறதா? என்றும் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த சசிகலா தரப்பு வழக்கறிஞர்,  ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு
கட்சி தொடர்ந்து செயல்பட வேண்டும் என்பதால் இடைக்கால பொதுச்செயலாளர்
நியமிக்கப்பட்டதாகவும்,  எம்.ஜி.ஆர். இறந்த போது கூட இதே போன்ற இடைக்கால ஏற்பாடு செய்யப்பட்டதாகவும்,  அதற்கு பொதுக்குழுவுக்கு அதிகாரம் உள்ளதாகவும்,  கட்சியில் இருந்து என்னை நீக்கவோ,  கட்சி விதிகளில் மாற்றம் செய்யவோ அவர்களுக்கு அதிகாரமில்லை எனவும் தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதிகள்,  ஒருவேளை நீங்கள் இடைக்கால பொதுச்செயலாளராக
தேர்ந்தெடுக்கப்பட்டதே செல்லாது என்றால் நீங்கள் எப்படி மனு தாக்கல் செய்ய
முடியும்? என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த சசிகலா தரப்பு வழக்கறிஞர்,  பொதுக்குழு மூலம் உறுப்பினர்கள்
தான் தம்மை இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்ததாகவும், பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கும் வரை தன்னை இடைக்கால பொதுச்செயலாளராக ஓ.பன்னீர் செல்வம் முன்மொழிந்து,  எடப்பாடி பழனிசாமி வழிமொழிந்து நிலையில், தன்னை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியதன் மூலம் அடிப்படை அமைப்பு மாற்றப்பட்டுள்ளதாக வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள்,  அடிப்படை அமைப்பு மாற்றப்பட்டதாக கூறுவதற்கு
இது ஒன்றும் அரசியல் சாசனம் இல்லையே? என்றும், அதிமுகவில் நீங்கள் அடிப்படை உறுப்பினரா? எனக் கேள்வி எழுப்பினார்.

அதற்கு,  தான் நீண்ட காலமாக அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் என சசிகலா தரப்பில் பதிலளிக்கப்பட்டது.  அதிமுக மற்றும் அதன் பொதுச்செயலாளர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாரயணன் ஆஜராகி,  பொதுக்குழுவிற்கு மட்டுமே உச்சபட்ச அதிகாரம் உள்ளதாகவும்,  2,665 பொதுக்குழு உறுப்பினர்கள் கூடி தான் பொதுச்செயலாளரை தேர்வு செய்ய முடியும் எனவும்,  அதிமுகவின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் மறைவிற்கு பிறகு பொதுச்செயலாளராக ஜெயலலிதா தேர்வு செய்யபட்டதாக தெரிவித்தார்.

கடந்தாண்டு ஜூலை மாதம் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர்
மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் நீக்கப்பட்டு,  சட்ட விதியில் திருத்தங்கள்
கொண்டு வரப்பட்டதாகவும்,  இந்த மனுவை தாக்கல் செய்த போது சசிகலா உறுப்பினராக இல்லை எனவும் தெரிவித்தார்.

பொதுச்செயலாளர்,  துணை பொதுச்செயலாளரை தவிர பொதுக்குழுவை கூட்டும் அதிகாரம் மற்றவர்களுக்கு இல்லையே,  பொதுக்குழு முறையாக நடைபெறவில்லை என்றால் அடிப்படை உறுப்பினர் என்ற முறையில் வழக்கு தொடர உரிமை இருக்கிறதா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அதிமுக மற்றும் எடப்பாடி தரப்பு வழக்கறிஞர் வழக்கு தொடர
உரிமை உள்ளதாகவும்,  ஆனால் சசிகலாவின் இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல எனவும் தெரிவித்தார்.  வாதங்கள் நிறைவடையாததால் விசாரணையை நீதிபதிகள் தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.

இந்த நிலையில்  வி.கே.சசிகலா வழக்கில் டிசம்பர் 4ம் தேதி (திங்கள் கிழமை)  சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன் மற்றும் என்.செந்தில்குமார் தீர்ப்பளிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.  ஆனால்,  மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உயர் நீதிமன்றம் நேற்று செயல்படவில்லை.  இந்த நிலையில்  அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கியதை எதிர்த்து வி.கே.சசிகலா தொடர்ந்த மேல்முறையீடு மனு மீது இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.  சசிகலாவின் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள் கட்சியில் இருந்து அவரை நீக்கியது செல்லும் என்பதை உறுதிப்படுத்தினர்.

Tags :
AIADMKEdappadi palanisamyMadras High CourtO Panneer selvamPARTYSasikalaTtvDinakaranVK Sasikala
Advertisement
Next Article