நவீன் பட்நாயக், நிதிஷ்குமார், சந்திர பாபு நாயுடுவுடன் சரத் பவார் பேச்சு!
தெலுங்குதேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு உடன் இந்தியா கூட்டணியைச் சேர்ந்த சரத் பவார், தொலைபேசி வாயிலாக பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
18வது நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்த நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 294 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. இந்தியா கூட்டணி 232 தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகிறது. இந்நிலையில் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நாடாளுமன்ற தேர்தலோடு ஆந்திரா, ஒடிசா, அருணாச்சல் பிரதேசம், சிக்கிம் மாநிலங்களிலும் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றன. இதில் அருணாச்சல் பிரதேசம், சிக்கிம் ஆகிய மாநிலங்களுக்கு கடந்த 2 ஆம் தேதி சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்றது. இதில் அருணாச்சல பிரதேசத்தில் பாஜகவும், சிக்கிமில் எஸ்கேஎம் முன்னிலை பெற்று ஆட்சியை தக்க வைத்து கொண்டன.
மேலும் நவீன் பட்நாயக், மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ் குமாருடனும் சரத்பவார் பேசியுள்ளதாக கூறப்படுகிறது. மக்களவைத் தேர்தலில் ஆட்சி அமைக்க 272 இடங்கள் தேவை என்பதால், இந்தியா கூட்டணியைச் சேர்ந்தவரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சரத் பவார், சந்திரபாபு நாயுடு, நவீன் பட்நாயக், நிதீஷ் குமார் ஆகியோருடன் தொலைப்பேசி வாயிலாக பேசியிருப்பது கூட்டணிக்காகத் தான் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.