மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே - சரத் பவார் சந்திப்பு! சூடுபிடிக்கும் தேர்தல் களம்!
பாஜக கூட்டணியை சேர்ந்த மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை தேசியவாத காங்கிரஸ்(சரத் பவார் அணி) தலைவர் சரத் பவார் இன்று (22.07.2024) சந்தித்து ஆலோசனை நடத்தியிருப்பது பேசுபொருளாகியுள்ளது.
மும்பையில் மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை தேசியவாத காங்கிரஸ்(சரத் அணி) தலைவர் சரத் பவார் இன்று (22.07.2024) சந்தித்து ஆலோசனை நடத்தினார். மாநிலத்தில் உள்ள நீர் பாசனம், பால் விலை உயர்வு மற்றும் சக்கரை தொழிற்சாலை பிரச்னைகள் குறித்து இருவரும் ஆலோசனை செய்ததாக அரசுத் தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இருப்பினும், சரத் பவாரை ஊழல் செய்வதில் தலைவர் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று கடுமையாக விமர்சித்திருந்த நிலையில், இருவரின் சந்திப்பு பேசு பொருளாகியுள்ளது.
பாஜகவுடன் இணைந்து மகாராஷ்டிரத்தில் ஆட்சி அமைத்துள்ள சிவசேனை கட்சிக்கு(ஷிண்டே அணி), மத்திய அமைச்சரவையில் கேபினேட் பதவி அளிக்காதது கூட்டணிக்குள் ஏற்கெனவே அதிருப்தி நிலவி வருகின்றது. இந்தாண்டு இறுதியில் மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மக்களவைத் தேர்தலில் அம்மாநிலத்தின் ஆளும் கூட்டணி பெரும் பின்னடைவை சந்தித்தது. இதனால், அதிருப்தி அடைந்த ஆளும் கூட்டணியில் உள்ள தேசியவாத காங்கிரஸ்(அஜித் பவார்) அணியின் முக்கிய தலைவர்கள் சரத் பவார் அணியில் இணைந்து வருகின்றனர். அஜித் பவாரும் மீண்டும் சரத் பவாருடன் இணைய முனைப்பு காட்டுவதாகவும் அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மகாராஷ்டிரத்தில் தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரே ஆட்சி அமைத்திருந்தார். இதற்கிடையே, ஆதரவு எம்எல்ஏக்களுடன் பாஜகவுடன் இணைந்த சிவசேனை மூத்த தலைவர் ஷிண்டே ஆட்சியைக் கைப்பற்றி பாஜக உதவியுடன் முதல்வரானார். அதேபோல், தேசியவாத காங்கிரஸின் எம்எல்ஏக்களுடன் பாஜக - சிவசேனை கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். பின்னர், உச்சநீதிமன்றத்தை நாடி தேசியவாத காங்கிரஸின் அதிக நிர்வாகிகள் தனக்கு ஆதரவாக இருப்பதை நிரூபித்து கட்சியையும் சின்னத்தையும் தன்வசப்படுத்திக் கொண்டார் அஜித் பவார்.
இந்நிலையில், மும்பையில் மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை தேசியவாத காங்கிரஸ்(சரத் அணி) தலைவர் சரத் பவார் இன்று (22.07.2024) சந்தித்து ஆலோசனை நடத்தினார். மாநிலத்தில் உள்ள நீர் பாசனம், பால் விலை உயர்வு மற்றும் சக்கரை தொழிற்சாலை பிரச்னைகள் குறித்து இருவரும் ஆலோசனை செய்ததாக அரசுத் தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இருப்பினும், சரத் பவாரை ஊழல் செய்வதில் தலைவர் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று கடுமையாக விமர்சித்திருந்த நிலையில், இருவரின் சந்திப்பு பேசு பொருளாகியுள்ளது.