சாரல் திருவிழா மலர் கண்காட்சி மேலும் 2 நாள் நீட்டிப்பு - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தற்போது மழைக்கால சீசனை முன்னிட்டு சாரல் திருவிழாவானது வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சாரல் திருவிழாவினை முன்னிட்டு மலர்க்கண்காட்சி 20-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி வரை நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து 4 நாட்கள் நடைபெற்ற மலர் கண்காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வருகை தந்தனர்.
மேலும் மலர் கண்காட்சி சுற்றுலா பயணிகள் கூட்டத்தால் களைகட்டியது. இந்த நிலையில், சுற்றுலா பயணிகளின் வரவேற்பை தொடர்ந்து தற்போது கூடுதலாக இன்றும், நாளையும் 2 நாட்கள் மலர் கண்காட்சி நடைபெறும் என்று தோட்டக்கலைத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல்கிஷோர், இ.ஆ.ப வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்,
"தென்காசி மாவட்டத்தில் சாரல் திருவிழா மலர் கண்காட்சி 2025 அரசு சுற்றுச்சுழல் பூங்கா, ஐந்தருவியில் 20.07.2025 முதல் 23.07.2025 வரை 4 நாட்கள் நடைபெற்றது. இந்நிகழ்வில் பழங்கள். காய்கறிகள், மலர்கள் மற்றும் வாசனை பொருட்களை கொண்டு தமிழ்நாடு பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை பிரதிபலிக்கும் வகையில் வடிவமைப்புகள் மற்றும் கருத்துக்களைக்கொண்டு வடிவமைக்கப்பட்டு பொது மக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது. பார்வையாளர்களின் வேண்டுகோளுக்கிணங்க மலர் கண்காட்சி அரங்கினை மேலும் 2 நாட்கள் (24.07.2025) மற்றும் (25.07.2025) நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.