மாரியம்மன் கோயில் பங்குனி உற்சவம் - பறவை காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்!
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட தோப்படி மாரியம்மன் எனும் சாரடி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் பங்குனி மாதம் உற்சவம் 10 நாட்கள் நடைபெறும். அந்த வகையில் கடந்த 9 ம் தேதி மாரியம்மன் கோயிலில் பங்குனி உற்சவம் காப்பு கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
தினந்தோறும் சாரடி மாரியம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள், ஆராதனைகள் நடைபெற்று, இரவு பல்வேறு வாகனங்களில் அம்மன் வீதியுலா காட்சி நடைபெற்றது. இந்த நிலையில் பங்குனி உற்சவத்தின் முக்கிய நிகழ்வாக இன்று காவடிகள் எடுத்து வழிபாடு நடைபெற்றது.
முன்னதாக கோயிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட சிறு தேரில் அம்மன் எழுந்தருளிய பின் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதனை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் பால்குடங்கள், அலகு காவடி, பறவை காவடிகள், எடுத்து முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தொடர்ந்து சாரடி மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில்
நிர்வாகத்தினர், பக்தர்கள் செய்திருந்தனர்.