#Tirunelveli -ல் திசையன்விளை உலக இரட்சகர் திருத்தல பெருவிழாவில் சப்பர பவனி!
நெல்லையில் சமூக நல்லிணக்கத்தோடு நடைபெற்ற திசையன்விளை உலக இரட்சகர் திருத்தலத் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
நெல்லை மாவட்டம் திசையன்விளை உலக இரட்சகர் திருத்தலத் திருவிழா செப்டம்பர்
20ம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து, நாள்தோறும் காலை திருப்பலி, மாலை மறையுறை நற்கருணை ஆசீர் போன்ற வழிபாடுகளும் நடைபெற்றது. 9ம் திருவிழாவில் தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில் பெருவிழா மாலை ஆராதனை நடைபெற்றது.
10ம் திருவிழாவில் தூத்துக்குடி மறைமாவட்ட முன்னாள் ஆயர் இவான் அம்புரோஸ்
தலைமையில் திருவிழா திருப்பலி நடைபெற்றது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக
மாலையில் திசையன்விளை நகர வீதிகளில் உலக இரட்சகரின் சப்பர பவனி நேற்று நடைபெற்றது. இதில், வழிநெடுகிலும் பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை உலக இரட்சகரின் பாதத்தில் வைத்து ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டனர். ரோஜாப்பூ மாலை மற்றும் செவ்வாழை
பழத்தார் நேர்த்திக்கடனாக கொடுத்தும் ஓலைப்பட்டி மற்றும் சில்வர் தாம்பூலங்களில் உப்பு,மிளகு, ஏந்தி வந்து உலக இரட்சகருக்கு நேர்த்திக்கடன் செலுத்தி வணங்கினர்.
திருவிழா தொடங்கும் முன்பு உலக இரட்சகர் திருத்தல திருவிழாவிற்கு திருத்தல
பங்குத்தந்தை அந்தோணி டக்ளஸ் இந்துக்கள் மற்றும் இஸ்லாமிய சமுதாயத்தினருக்கு
அவர்களது வழிபாட்டு ஸ்தலங்களுக்கே சென்று திருவிழா அழைப்பிதழ் வழங்கியதும்,
இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்கள் மத நல்லிணக்கத்தோடு உலக இரட்சகர் திருத்தல
திருவிழாவிற்கு பொதுமக்களை வரவேற்று தாங்கள் சார்ந்த மதங்களின் சார்பில்
பிளக்ஸ் பேனர் வைத்ததும் குறிப்பிடத்தக்கது.