மீண்டும் இணையும் சந்தானம் - ஆர்யா கூட்டணி!
நடிகர் ஆர்யாவும், சந்தானமும் இணைந்து அட்வென்ச்சர் ஃபேண்டஸி கதையில் கார்த்திக் யோகி இயக்கத்தில் சீக்கிரம் நடிக்க இருப்பதாக ஆர்யா தெரிவித்துள்ளார்.
நடிகர் சந்தானம் ‘டிக்கிலோனா’ படத்தின் இயக்குநர் கார்த்திக் யோகியுடன் மீண்டும் இணைந்துள்ளார். இப்படத்திற்கு ‘வடக்குப்பட்டி ராமசாமி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ‘விட்னஸ்’ பட இயக்குநர் தீபக் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். மேலும் படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், ஆர்.சுந்தர்ராஜன் ஆகியோர் நடித்துள்ளனர்.
இத்திரைப்படம் பிப்ரவரி 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று (ஜன.27) சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர் அஸ்வின், நடிகர் ஆர்யா, நடிகை மேகா ஆகாஷ், நடிகர் அல்லு சிரிஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழாவில் கலந்துகொண்ட நடிகர் ஆர்யா பேசியதாவது, “பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் இருந்தே எனக்கும் சந்தானத்திற்கும் ஒரே கேரவன் தான். அப்போது கேரவனுக்குள்ளேயே சந்தானத்தைப் பார்க்க ரசிகர் ஒருவர் வந்துவிட்டார். அந்த அளவுக்கு சந்தானம் மீது ரசிகர்கள் அன்பாக உள்ளனர். நிச்சயம் ‘வடக்குப்பட்டி ராமசாமி’ ஹிட்டாகும். இயக்குநர் கார்த்திக்கும் அதன் மீது நம்பிக்கை வைத்துள்ளார்.
இந்தப் படத்தைத் தயாரித்துள்ள விஸ்வா தெலுங்கில் நிறைய ஹிட் படங்களைக் கொடுத்துள்ளார். தமிழில் இந்தப் படமும் அவருக்கு ஹிட் கொடுக்கும். 65 நாட்கள் ஷூட்டிங் என்றதும் ஹெல்த் டிப்ஸ் சந்தானம் கேட்டார். நானும் சொன்னேன். பிறகு கேட்டால் அவர் மேகா ஆகாஷூடன் ஷெட்டில் ஆடிக்கொண்டிருக்கிறேன் என்றார். அந்த அளவுக்கு ஹெல்த் கான்ஷியஸ் அவருக்கு உண்டு.
படத்தில் அனைவரும் சிறப்பாக உழைப்பைக் கொடுத்துள்ளனர். நானும் சந்தானமும் இணைந்து அட்வென்ச்சர் ஃபேண்டஸி கதையில் கார்த்திக் யோகி இயக்கத்தில் சீக்கிரம் நடிக்க இருக்கிறோம்” என்றார்.