" முதுகுக்கு கீழே அவமரியாதையாக பச்சை குத்தப்பட்ட சஞ்சய் ராவத்தின் படம்" - வைரலாகும் பதிவு உண்மை என்ன ?
This News Fact Checked by ‘Factly’
மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே மற்றும் ஆதித்யா தாக்கரேவின் படங்களை தனது முதுகில் பச்சை குத்திய நபர் சஞ்சய் ராவத்தின் படத்தை முதுகுக்கு கீழே அவமரியாதையாக குத்தியதாக சமூக வலைதளங்களில் படம் வெளியானது. இதுகுறித்த உண்மைத் தன்மையை விரிவாக காணலாம்.
மகாராஷ்டிராவில் வருகிற நவம்பர் 20ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. மொத்தம் உள்ள 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. பாஜக – ஏக்னாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா – அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் ஒன்றிணைந்து மகாயுதி எனும் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கின்றன. மறுபுறம் எதிர்க்கட்சி வரிசையில் காங்கிரஸ், உத்தவ் தாக்கரே அணி சிவசேனா, சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரசின் ஒன்றிணைந்து மகா விகாஸ் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கின்றன.
மகராஷ்டிரா சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. தேர்தல் தொடங்கியுள்ளதால் சமூக வலைதளங்களில் நிறைய பொய் செய்திகளும் பரவத் தொடங்கியுள்ளன. இதன் ஒருபகுதியாக உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா தலைவர்களின் உருவத்தை தனது உடலில் பச்சை குத்திய ஒரு நபரின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது .
சமூக ஊடகங்களில் பரவிய அந்த படத்தில் அந்த நபரின் முதுகில் உத்தவ் தாக்கரே மற்றும் ஆதித்யா தாக்கரே ஆகியோரின் படங்கள் இடம்பெற்ற நிலையில் முதுகுக்கு கீழே சஞ்சய் ராவத்தின் அவமரியாதை ஏற்படுத்தும் விதமாக வரையப்பட்டதாக இடம்பெற்றிருந்தது. இதுகுறித்த உண்மைத் தன்மையை அறிய வைரலாக பரவிய புகைப்படத்தின் உண்மை சரிபார்ப்புக்கு பேக்ட்லி உட்படுத்தியது.
உண்மை சரிபார்ப்பு :
சமூக வலைதளங்களில் வைரலான புகைப்படத்தின் கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலுக்கு உட்படுத்தியபோது அது செப்டம்பர் 2022 இல் பல செய்தி நிறுவனங்களால் வெளியிடப்பட்ட செய்திகளுக்கு அழைத்துச் சென்றது. இதன்படி உண்மை படத்தில் உத்தவ் தாக்கரே மற்றும் ஆதித்யா தாக்கரேவின் படங்கள் மட்டுமே முதுகில் பச்சை குத்தப்பட்டுள்ளதாக செய்திகளில் இடம்பெற்றுள்ளன. மாறாக அதில் சஞ்சய் ராவத்தின் படம் இடம்பெறவில்லை.
மேலும் இந்த செய்தி அறிக்கைகளின்படி, சோலாப்பூரைச் சேர்ந்த ராமண்ணா ஜமாதர் என்ற கட்டுமானத் தொழிலாளி, சிவசேனா மற்றும் தாக்கரேவின் குடும்பத்தின் மீதான தனது விசுவாசத்தை வெளிப்படுத்தும் வகையில் உத்தவ் மற்றும் ஆதித்யா தாக்கரேவின் முகத்தை முதுகில் பச்சை குத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. வைரலான புகைப்படத்தை அசல் புகைப்படத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால், சஞ்சய் ரவுத்தின் டாட்டூ டிஜிட்டல் முறையில் எடிட் செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும், ராமண்ணா ஜமாதர் TV மராத்திக்கு அளித்த பேட்டியில் , தனது முதுகில் உத்தவ் மற்றும் ஆதித்யா தாக்கரே ஆகியோரின் படங்கள் பச்சை குத்தியதை எடுத்துக் காட்டினார். இந்தக் காட்சிகள் ராமண்ணாவின் முகநூலிலும் பகிரப்பட்டுள்ளன. இதன் மூலம் அவை திரித்து வெளியிடப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது.
முடிவு :
மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே மற்றும் ஆதித்யா தாக்கரேவின் படங்களை தனது முதுகில் பச்சை குத்திய நபர் சஞ்சய் ராவத்தின் படத்தை முதுகுக்கு கீழே அவமரியாதையாக குத்தியதாக சமூக வலைதளங்களில் வெளியான படம் போலியாக தயாரிக்கப்பட்டுள்ளது நிரூபணம் ஆகியுள்ளது.
Note : This story was originally published by ‘Factly’ and translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.