சங்கீத கலாநிதி விருது சர்ச்சை | மியூசிக் அகடமி தலைவர் முரளி பதில்!
சங்கீத கலாநிதி விருது விவகாரத்தில் பதிலளிக்கும் வகையில் மியூசிக் அகடமி தலைவர் முரளி பதில் கடிதம் எழுதியுள்ளார்.
ஆண்டுதோறும் கர்நாடக இசைக் கலைஞர்களுக்கு சங்கீத கலாநிதி விருது அளிக்கப்பட்டு வருகிறது. இந்தாண்டு கர்நாடக இசைப் பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வரும் நிலையில், சங்கீத கலாநிதி விருதினை டி.எம்.கிருஷ்ணாவுக்கு வழங்கக்கூடாது என்று ஒரு தரப்பினர் எதிர்ப்பு குரல் எழுப்பி வருகின்றனர். சங்கீதம் பாடும் மேடைகளில் பல்வேறு முற்போக்கு பணிகளையும் கிருஷ்ணா செய்துவருவதால், அவருக்கு எதிரானவர்களே தற்போது இந்த விருது அறிவிப்பையும் எதிர்ப்பதாக கூறப்படுகிறது.
பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு விருது அறிவிப்புக்கு கர்நாடக இசைக்கலைஞர்கள் ரஞ்சினி, காயத்ரி ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் வரும் டிசம்பர் மாதம் சென்னை மியூசிக் அகாடமியில் நடைபெற உள்ள 98-வது மார்கழி நிகழ்வை புறக்கணிக்க போவதாகவும் கூறியுள்ளனர். பெரியாரை போற்றும் டி.எம்.கிருஷ்ணா போன்றோரை விருது கொடுத்து ஊக்குவிப்பது ஆபத்தானது என்று கடுமையாக விமர்சித்துள்ளனர்.
இவர்களின் கருத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இவர்களின் கடிதத்திற்கு பதிலளிக்கும் வகையில் மியூசிக் அகடமி தலைவர் முரளி கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக அவர் அனுப்பிய கடிதத்தில், “மார்ச் 20, 2024 அன்று உங்களது கடிதத்தைப் பெற்றேன், அதில் தேவையற்ற கூற்றுக்கள், அவதூறுகள் கருத்துக்களை மரியாதைக்குரிய மூத்த சக-இசைக்கலைஞருக்கு எதிராக அதன் மோசமான தொனியுடன் நிரம்பி இருந்தது. அந்த அறிக்கை எனக்கு அதிர்ச்சி அளித்தது.
1942-ஆம் ஆண்டு தி மியூசிக் அகாடமியால் நிறுவப்பட்ட சங்கீத கலாநிதி விருது கர்நாடக இசையின் மிக உயரிய விருது என்பதை நீங்கள் அறிவீர்கள். சங்கீத கலாநிதியின் தேர்வு ஆண்டுதோறும் மியூசிக் அகாடமியின் தனிச்சிறப்பாகும், மேலும் இது எப்போதும் கவனமாக ஆலோசித்த பின்னரே தீர்மானிக்கப்படுகிறது. இசை துறையில் நீண்ட காலம் பங்காற்றியவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு அகாடமியின் செயற்குழு டி.எம். கிருஷ்ணா தனது இசை வாழ்க்கையில், இசையில் சிறந்து விளங்கியதன் அடிப்படையிலான தேர்வாகும். வெளிப்புற காரணிகள் எதுவும் எங்கள் தேர்வை பாதிக்கவில்லை.
நீங்கள் விரும்பாத, தகுதியற்ற, மோசமான ரசனை கொண்டதாக நீங்கள் கருதும் ஒரு இசைக்கலைஞரை அகாடமி விருதுக்கு தேர்ந்தெடுத்துள்ளதன் காரணமாக வரவிருக்கும் சங்கீத அகாடமி மாநாட்டில் இருந்து விலகுவதற்கான உங்கள் முடிவை நாங்கள் கவனத்தில் எடுத்துக்கொள்கிறோம். நீங்கள் எனக்கும் அகாடமிக்கும் அனுப்பிய கடிதத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளீர்கள், இது ஒழுக்கத்திற்கு மாறான நடவடிக்கையாகும். மேலும் உங்கள் கடிதத்தின் நோக்கம் சந்தேகத்தை எழுப்புகிறது.
பொதுவாக, நீங்கள் என்னிடமும், அகாடமியிடமும் தெரிவிப்பதற்கு முன்பாக சமூக ஊடகங்களில் பதிவிட்டதால், அதற்கான பதிலை நாங்கள் அளிக்கத் தேவையில்லை. ஆனால், கர்நாடக சங்கீதத் துறையில் நீங்கள் ஆற்றிய பங்களிப்பைக் கருத்தில் கொண்டு, உங்களுக்கான பதில் அளிப்பதை, நான் மறுக்க விரும்பவில்லை” என குறிப்பிட்டுள்ளார்.