இந்தியாவில் மீண்டும் பரவும் 'சண்டிபுரா வைரஸ்' - #WHO எச்சரிக்கை!
இந்தியாவில் சண்டிபுரா வைரஸ் மீண்டும் பரவிவரும் நிலையில் உலக மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி உலக சுகாதார மையம் அறிவுறுத்தியுள்ளது.
உலக நாடுகளில் குரங்கு அம்மை பரவல் அதிகரித்து வருவதாக கூறி, சர்வதேச பொது சுகாதார அவசர நிலையை 2 வாரம் முன், உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது. அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இப்போது தான் மத்திய, மாநில அரசுகள் முழு வீச்சில் செய்து வருகின்றன. இந்நிலையில் தற்போது சண்டிபுரா வைரஸ் தொற்று பரவல் அதிகரிக்க துவங்கி உள்ளது. மஹாராஷ்டிராவில் சண்டிபுரா கிராமத்தில் 1965-ம் ஆண்டு முதல்முறையாக இந்த தொற்று கண்டறியப்பட்டது. இதனால் இத்தொற்று சண்டிபுரா என்று அழைக்கப்படுகிறது.
இந்த தொற்று கடந்த ஜூன் முதல் ஆகஸ்ட் 15-ம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் 245 பேருக்கு சண்டிபுரா வைரஸ் உறுதி செய்யப்பட்ட நிலையில், அதில் 64 பேர் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள உலக சுகாதார அமைப்பு மணல் ஈக்கள் (Sandflies) மூலம் மழைக்காலங்களில் பரவும் இந்த வைரஸ், இந்தியாவில் வரும் வாரங்களில் மேலும் பலருக்கு பரவுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக எச்சரித்துள்ளது.
சண்டிபுரா வைரஸ் பரவலை தடுக்க இதுவரை முறையான சிகிச்சைகள் மற்றும் தடுப்பூசிகள் கண்டறியப்படவில்லை. கடந்த 2003-ம் ஆண்டு ஆந்திரா மற்றும் மகாராஷ்டிராவில் பரவிய சண்டிபுரா தொற்றால் 183 குழந்தைகள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து, உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “இந்தியாவில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போது சண்டிபுரா வைரஸ் தொற்று அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும். இந்தியா முழுவதும் 42 மாவட்ட மக்கள் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 15 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கடுமையான காய்ச்சல் அல்லது நரம்பு மண்டல பாதிப்பு இருந்தால் டாக்டர்களிடம் அழைத்து செல்ல வேண்டும்.
இந்த வைரஸ் பாதித்தால் காய்ச்சல், வாந்தி, நரம்பியல் குறைபாடுகள், மூளைக்காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்படும். பெரும்பாலும் 15 வயதிற்குட்பட்ட குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். பாதிக்கப்பட்ட குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 48 மணி நேரத்தில் உயிரிழக்கின்றனர். அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மக்கள் சிகிச்சை பெற வேண்டும்” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.