#DonaldTrump-க்கு வாழ்த்து தெரிவித்து ஒடிசாவில் மணல் சிற்பம்!
அமெரிக்காவில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெறும். அந்த வகையில் கடந்த ஆண்டு நவம்பர் 5ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் குடியரசுக்கட்சியின் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். இதனையடுத்து, அமெரிக்காவின் 47வது அதிபராக டிரம்ப் இன்று (ஜன.20) பதவியேற்க உள்ளார். இந்த பதவியேற்பு விழா அந்நாட்டின் நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெறுகிறது.
அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டொனால்ட் டிரம்ப்க்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார். மேலும், பதவிக்காலம் முடிவடையும் அதிபர் ஜோ பைடன், விழாவில் கலந்து கொண்டு அதிகாரத்தை டிரம்ப்பிடம் ஒப்படைக்கிறார். பதவியேற்பு விழாவுக்கான கொண்டாட்டங்கள் நேற்று முன்தினம் மாலை வாணவேடிக்கைகளுடன் கோலகலமாக தொடங்கின.
அமெரிக்க நேரப்படி நண்பகல் 12 மணிக்கு (இந்திய நேரப்படி இரவு 10.30 மணி) பதவியேற்பு விழா நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் பூரி கடற்கரையில் 47 அடி உயரமுள்ள டொனால்டு டிரம்ப் மணல் சிற்பத்தை வரைந்து, அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதில், "வாழ்த்துகள், வெள்ளை மாளிகைக்கு நல்வரவு" என எழுதியுள்ளார். சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக், நாட்டில் நடக்கும் மகிழ்ச்சியான சம்பவங்கள் மற்றும் துக்க நிகழ்வுகளை பூரி கடற்கரையில் மணல் சிற்பங்களாக செதுக்கி வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.