#Samsung தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ் | “பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட்டதில் மகிழ்ச்சி!” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!
சாம்சங் நிறுவனத்தில் நடைபெற்று வந்த தொழிலாளர்கள் மற்றும் நிர்வாகத்தினருக்கு இடையேயான பிரச்னைகளுக்கு இணக்கமானதொரு தீர்வு காணப்பட்டதில் மகிழ்ச்சி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி காஞ்சிபுரம் மாவட்ட ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வரும் சாம்சங் தொழிற்சாலை ஊழியர்கள் கடந்த மாதம் 9-ம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தை அறிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். பிறகு முதலமைச்சர் அறிவுறுத்தலின் பெயரில் அமைச்சர்கள், போராட்டம் நடத்திய ஊழியர்கள், சாம்சங் நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், ஒரு தரப்பினர் சாம்சங் நிர்வாகம் கூறிய சலுகைகளை ஏற்றுக்கொண்டனர். மற்றொரு தரப்பினர் சிஐடியு தொழிற்சங்கம் அமைக்க சாம்சங் நிர்வாகம் அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
கடந்த வாரம், சிஐடியு தொழிற்சங்கத்தினர் மேற்கொண்ட போராட்ட பந்தல்கள் அகற்றப்பட்டன. மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபங்களில் அடைக்கப்பட்டனர். தொழிற்சங்கம் அமைப்பது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வாறு சாம்சங் ஊழியர்களில் ஒருதரப்பினர் போராட்டம் நீடித்து வந்தது.
இந்நிலையில் இன்று தங்கள் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக சாம்சங் ஊழியர்கள் அறிவித்தனர். இதுதொடர்பாக வெளியான அறிவுரைகளை இருதரப்பினரும் ஏற்றுக் கொண்டு வேலை நிறுத்தத்தை கைவிட்டு, தொழிலாளர்கள் உடனடியாகப் பணிக்கு திரும்புவதாக தெரிவித்தனர். இதனால், சாம்சங் தொழிற்சாலையில் நடைபெற்று வந்த வேலை நிறுத்த போராட்டம் முடிவுக்கு வந்தது.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சாம்சங் நிறுவனத்தில் நடைபெற்று வந்த தொழிலாளர்கள் மற்றும் நிர்வாகத்தினருக்கு இடையேயான பிரச்னைகளுக்கு இணக்கமானதொரு தீர்வு காணப்பட்டதில் மகிழ்ச்சி! இப்பிரச்னையைத் தீர்ப்பதற்கு உறுதுணையாக இருந்து ஒத்துழைத்த CITU தொழிற்சங்க நிர்வாகிகளுக்கும், தொழிலாளர்கள் அனைவருக்கும், சாம்சங் நிறுவனத்தின் நிர்வாகிகளுக்கும் எனது நெஞ்சார்ந்த பாராட்டுகளும் நன்றியும்!
பல கட்டப் பேச்சுவார்த்தைகள் நடத்தி, நல்ல முடிவுக்குக் கொண்டுவர, சிறப்பான முயற்சிகளை மேற்கொண்ட அமைச்சர்கள் ஏ.வ.வேலு, தா.மோ.அன்பரசன், சி.வி.கணேசன், டிஆர்பி.ராஜா ஆகியோருக்கும் எனது பாராட்டுகள்! நன்றி! திமுக அரசானது என்றும் தொழிலாளர் நலனை முன்னிறுத்திப் பாடுபடும் அரசு! அந்த நிலைப்பாட்டில் இருந்து அது என்றும் மாறாது; தொடர்ந்து செயலாற்றும்.
'நடந்தவற்றை நம்மைக் கடந்தனவாகக்' கருதி, அவற்றை நாம் பின்தள்ளி, ஒரு புதிய துவக்கத்திற்காக, வளமான எதிர்காலத்தை நோக்கி முன்னேறிச் செல்ல, சாம்சங் நிறுவனத் தொழிலாளர்கள் மற்றும் நிர்வாகத்தினரைக் கேட்டுக்கொண்டு அன்போடு அனைவரையும் வாழ்த்தி மகிழ்கிறேன்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.