39 நாட்களுக்கு பின் பணிக்குத் திரும்பிய #Samsung ஊழியர்கள்!
கடந்த மாதம் 9ஆம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்த
சாம்சங் ஊழியர்கள், இன்று மீண்டும் பணிக்கு திரும்பினர்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சுங்குவார்சத்திரம் பகுதியில்
உள்ள சாம்சங் நிறுவன ஊழியர்கள், கடந்த மாதம் 9ஆம் தேதி முதல் ஊதிய உயர்வு,
தொழிற்சங்க அங்கீகாரம், 8 மணி நேர வேலை என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி
தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இதுதொடர்பாக தொழிலாளர் நலத்துறையிடம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியில் முடிவடைந்தன. அதன் பின்பு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சாம்சங் ஊழியர்களின் வேலைநிறுத்தத்தை சுமூகமாய் தீர்க்க தாமோ அன்பரசன், சிவி கணேசன், டிஆர்பி ராஜா ஆகிய மூன்று அமைச்சர்கள் அடங்கிய குழுவை அமைத்தார். இந்த குழுவுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியடைய, ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் தொடர்ந்தது.
இந்த நிலையில் கடந்த அக்.9ஆம் தேதி ஊழியர்களின் போராட்ட பந்தலை போலீசார் நள்ளிரவில்
அப்புறப்படுத்தினர். மேலும் 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்களையும் நள்ளிரவில் கைது செய்தனர். அதன் பின்பு அடுத்த நாள் 10ஆம்தேதி, அதே இடத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட சாம்சங் ஊழியர்கள் மற்றும் சிஐடியு மாநிலத் தலைவர் சௌந்தர்ராஜன், மாநில செயலாளர் முத்துக்குமார், ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
தொடர்ந்து 11-ம் தேதி சாம்சங் ஊழியர்கள் போராட்டம் நடத்திய இடம் முழுவதும்,
போலீசார் குவிக்கப்பட்டு கைது நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது சாம்சங்
ஊழியர்கள் சுமார் 50 பேர் மற்றும் சிஐடியு மாநில தலைவர் சௌந்தரராஜன்,
முத்துக்குமார் போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் மீண்டும்
அடைத்தனர். அன்றே சுங்குவார்சத்திரம் அருகே பொடவூர் பகுதியில் உள்ள தனியார்
விடுதியின் நுழைவாயிலில், சாம்சங் ஊழியர்கள் ஒன்று திரண்டனர். அப்பொழுது நாம்
தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அதிமுகவைச் சேர்ந்த
முன்னாள் அமைச்சர்கள் ஊழியர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
அதன் பின்பு ஆயுத பூஜை, விஜயதசமி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் மீண்டும்
கடந்த 14ஆம் தேதி, ஏற்கனவே போராட்டம் நடைபெற்ற இடத்தில் இருந்து 500 மீட்டர்
தூரத்தில், சாம்சங் ஊழியருக்கு சொந்தமான இடத்தில் ஒன்று கூடி போராட்டத்தில்
ஈடுபட முயற்சித்தனர். அப்போது, நீங்கள் உரிய அனுமதி பெறாமல் போராட்டம் நடத்துகிறீர்கள்;
நாங்கள் உங்களை கைது செய்கிறோம்; நீங்கள் எங்களுக்கு ஒத்துழைப்பு தாருங்கள்
என்று போலீசார் கூறினார். இதனால் போலீசாருக்கும், ஊழியர்களுக்கும்
வாக்குவாதம் முற்றியது.
இந்த நிலையில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், போராட்டத்தில்
ஈடுபட்டு வந்த சாம்சங் ஊழியர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். பின்பு
போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். அதன் பின்பு நேற்று முன்தினம் ஏற்கனவே முதலமைச்சர் அமைத்த அமைச்சர்கள் குழு சாம்சங் ஊழியர்கள், சாம்சங் நிர்வாகிகள், சிஐடியு தலைவர்கள் ஆகியோரை அழைத்து முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்ததால், சுமார் 39 நாட்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சாம்சங் ஊழியர்கள், மீண்டும் இன்று பணிக்கு
திரும்பினர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் சாம்சங் வாகனத்தில்
வராமல் அனைவரும் சொந்த வாகனத்தில் சென்றனர்.