“7 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தை எதற்காக தொடர்கிறார்கள் என்று தெரியவில்லை” - அமைச்சர் #TRBRajaa பேட்டி!
சாம்சங் நிறுவன ஊழியர்கள் போராட்டம் தொடர்பாக 7 முறை பேச்சுவார்த்தை நடத்தியும்,
எதற்காக போராட்டத்தை தொடர்கிறார்கள் என தெரியவில்லை என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் இன்று (அக். 8) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. கடந்த மாதம் தமிழக அமைச்சரவையில் பல்வேறு மாற்றங்கள் அறிவிக்கப்பட்டன. அதன் பிறகு நடைபெற்ற முதல் அமைச்சரவை கூட்டம் இதுவாகும். இந்த அமைச்சரவை கூட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மூத்த அமைச்சர் துரைமுருகன், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், உள்ளிட்ட அனைத்து துறை அமைச்சர்களும் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி பிரதானமாக ஆலோசிக்கப்பட்டது. அதேபோல் முதலமைச்சரின் அமெரிக்க பயணத்தின் போது, பன்னாட்டு தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், அந்நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்தும் ஆலோசனை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டன.
அமைச்சரவை மாற்றத்திற்கு பிறகு, முதன் முதலாக புதிய அமைச்சர்களான ஆர்.ராமசந்திரன், கோவி செழியன் ஆகியோர் அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொண்டனர். அமைச்சர்கள் செந்தில் பாலாஜி , நாசர் ஆகியோரும் நீண்ட நாட்களுக்கு பிறகு அமைச்சரவை கூட்டத்தில் இன்று பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் தமிழ்நாட்டில் மாவட்ட வளர்ச்சி பணிகளை துரிதப்படுத்த, பொது மக்களுக்கு சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளை கண்காணிக்க பொறுப்பு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அமைச்சரவை கூட்டம் நிறைவடைந்த பின் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் டி.ஆர்.பி.ராஜா செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது சாம்சங் நிறுவன ஊழியர்கள் போராட்டம் தொடர்பாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா விளக்கம் அளித்தார். அவர் பேசியதாவது,
“சாம்சங் நிறுவன ஊழியர்கள் போராட்டம் தொடர்பாக 7 முறை பேச்சுவார்த்தை நடைபெற்றது.
எதற்காக போராட்டத்தை நீட்டிக்கிறார்கள் என்று தெரியவில்லை? முதலமைச்சர் 3 அமைச்சர்கள் கொண்ட குழுவை நியமித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட பின்பு கூட ஏன் போராட்டத்தை தொடர்கிறார்கள்? என்று தெரியவில்லை. போராட்டம் நடத்தும் ஒவ்வொரு நாளும் அவர்களுக்கான ஊதியம் மறுக்கப்படும்.
முதலமைச்சர் நேரடியாக மக்கள் பக்கம் இருக்கிறார். மக்களுக்கு மேலும் வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்று உடன் இருக்கிறார். சாம்சங் தொழிலாளர்கள் பிரச்னையை பொறுத்தவரை நிறுவனம் தரப்பில் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களிடம் தான் பேசுவோம் என கூறுகிறார்கள். ஊழியர்கள் சிஐடியு தரப்பில் பேச வேண்டும் என்று கூறுகிறார்கள். வழக்கு நிலுவையில் உள்ளது. உங்களால் எந்த பாதிப்பும் மற்ற ஊழியர்களுக்கு வந்து விடக்கூடாது என்று மனதில் கொள்ள வேண்டும். தமிழக முதலமைச்சர் உங்கள் பக்கம் இருக்கிறார்கள் என்று கவனத்தில் கொள்ளுங்கள்”
இவ்வாறு அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.