சமத்துவ சந்தனக்குட வைபவ கொடியேற்று விழா - அனைத்து மதத்தினரும் இணைந்து கோலாகல கொண்டாட்டம்!
ஆண்டுதோறும் ஒருத்தட்டு கிராமத்தில் கொண்டாடப்படும் சமத்துவ சந்தனக்குட வைபவ கொடியேற்று விழாவில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று கோலகலமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே உள்ள ஒருத்தட்டு கிராமம் 23 குக்கிராமங்களின் தாய் கிராமம் ஆகும். இந்த கிராமத்தில் இந்து மற்றும் இஸ்லாமிய மக்கள் பரவலாக வசித்து வருகின்றனர். கடந்த 700 ஆண்டுகளுக்கு முன்பு இக்கிராமத்திற்கு இறைப் பணிக்காக, சையது மொய்னுதீன் சிஸ்டி மற்றும் சையது இஸ்மாயில் சிஸ்டி வந்துள்ளனர்.
அப்போதைய மன்னர்கள், மதம் மாற்றம் செய்ய வந்ததாக எண்ணி சோழவந்தான் போரின் போது இவர்களை கொன்றதாக வரலாறு. ஆனால், கிராமத்தில் வசித்த இந்து மற்றும் இஸ்லாமிய மக்கள் இவர்களின் இறை பணியை போற்றும் விதமாக இருவரின் உடல்களையும் கிராமத்திலேயே அடக்கம் செய்துள்ளனர்.
இவர்கள் மக்கள் மீது கொண்ட அக்கரையின் காரணமாக இக்கிராம மக்கள் ஆண்டு தோரும் உருஷ் எனப்படும் சமத்துவ சந்தனக் குட வைபவ கொடியேற்று விழாவை கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில், இந்த ஆண்டிற்கான சமத்துவ சந்தனக்குட வைபவ கொடியேற்று விழா கோரி தர்கா நிர்வாக இப்ராகிம் தலைமையில் நடைபெற்றது. ஒருத்தட்டு கரட்டு குன்றுப் பகுதியிலிருந்து சந்தனக்குடம் மேல தாளத்துடன் எடுத்து வரப்பட்டது. அனைத்து இந்துக்களும் வீடுகளின் முன்பு சந்தனக் குடத்தை சுமந்துவரும் குருவின் கால்களில் புனித நீர் ஊற்றி பத்தி , கற்கண்டுகள் கொடுத்து ஆசி பெற்றனர்.
பின்னர், சந்தனக் குடங்களும் இந்து , இஸ்லாமியர்கள் புடைசூழ தர்கா வந்தடைத்தது. தொழுகை நடத்தி, தர்காவில் சையது மொய்னுதீன் சிஸ்டி மற்றும் சையது இஸ்மாயில் சிஸ்டி ஸ்தலத்தில் சத்தனம் பூசப்பட்டு ஆராதனை நடைபெற்றது. இந்துக்கள் விளக்கு ஏற்றியும், இஸ்லாமியர்கள் பத்தி, சாம்பிராணி ஏற்றியும் வழிபட்டனர். பின்னர் சம விருத்து ஏற்பாடு செய்யப்பட்டு அசைவ உணவு ( பிரியாணி , மீன் , கோழிக்கறி ) பறிமாறப்பட்டது. ஒருத்தட்டு கிராமம் மட்டுமல்லாது சுற்றுவட்டார கிராமங்களிலிருத்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
ஆண்டு தோரும் இந்து முஸ்லீம் இணைந்து கொண்டாடும் இந்த சமத்துவ
சந்தன குடம் வைபவ கொடியேற்று விழா இப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற
விழாவாகும் .