மீண்டும் ஓபன்ஏஐ நிறுவனத்திற்கு திரும்பும் சாம் ஆல்ட்மேன்!
ஓபன்ஏஐ நிறுவனம், சாம் ஆல்ட்மேனை மீண்டும் தலைமை பொறுப்பில் நியமித்துள்ளது.
கடந்த வார இறுதியில் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு அந்நிறுவனத்தின் இணை நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான சாம் ஆல்ட்மேனை அந்தப் பொறுப்பிலிருந்து நீக்கியது.
இதற்கு நிறுவனத்தின் ஊழியர்கள் தரப்பிலிருந்தும் முதலீட்டாளர்கள் தரப்பிலிருந்தும் கடும் எதிர்ப்பு எழவே, நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு புதிதாக மாற்றப்பட்டதோடு மீண்டும் சிஇஓ-வாக சாம் ஆல்ட்மேனை நியமித்துள்ளது.
இதையும் படியுங்கள்:இந்தோனேசியாவில் கடுமையான நிலநடுக்கம்!
ஓபன்ஏஐ நிறுவனம் வெளியிட்டுள்ள குறிப்பில், ஓபன்ஏஐ நிறுவனத்தில் தலைமை நிர்வாக அதிகாரியாக சாம் ஆல்ட்மேன் இணைய கொள்கை ரீதியான உடன்படிக்கையை நாங்கள் எட்டியுள்ளோம் என தெரிவித்துள்ளது. மேலும், சாம் நீக்கப்பட்டது தொடர்பாக தகவல்களைத் திரட்டவுள்ளதாகவும் இதுவரை பொறுமை காத்ததுக்கு நன்றியையும் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக சாம் ஆல்ட்மேன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டதாவது,
நான் ஓபன்ஏஐ-யை நேசிக்கிறேன். கடந்த சில நாட்களாக இலக்கை நோக்கி எனது குழுவை இணைப்பதிலேயே செலவிட்டுக் கொண்டிருந்தேன். மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் சேர்வதற்கு முடிவெடுத்ததும் அவர்களை மனதில் வைத்துத்தான்.
மேலும், புதிய நிர்வாகக் குழுவோடும் சத்ய நாதெள்ளா ஆதரவோடும் ஓபன்ஏஐக்குத் திரும்புவதில் ஆர்வமாக விருக்கிறேன். மைக்ரோசாஃப்ட் உடன் எங்கள் உறவு வலுபெறுகிறது.
ஓபன்ஏஐ-யின் பெரிய முதலீட்டாளரான மைக்ரோசாஃப்ட் நிறுவனம் சாம் ஆல்ட்மேன் தலைமையில் புதிய குழு ஒன்றை உருவாக்கவிருந்தது.
முன்னதாக, ஓபன்ஏஐ நிறுவனத்தின் 500 ஊழியர்கள் தலைமை பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட சாம் ஆல்ட்மேனை மீண்டும் கொண்டுவராவிட்டால் அந்நிறுவனத்தில் இருந்து விலகவுள்ளதாக எச்சரித்தனர்.
செய்யறிவு தொழில்நுட்பத்தில் முன்னணி நிறுவனமாக விளங்கும் ஓபன்ஏஐ நிறுவனத்தின் தயாரிப்புகளில் ஒன்று சாட்ஜிபிடி. சாட்ஜிபிடி குரல் வழியாகப் பயனர்களுடன் உரையாடும் செய்யறிவு தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.