2023-ல் குரானை எரித்த சல்வான் மோமிகா சுட்டுக்கொலை!
கடந்த 2023ஆம் ஆண்டு, ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் மசூதிக்கு வெளியே நடைபெற்ற போராட்டத்தின் போது, ஈராக் கிறிஸ்தவரான சல்வான் மோமிகா என்பவர் இஸ்லாமியர்களின் புனித நூலான குரானை எரித்தார். இந்த செயலுக்காக பல இஸ்லாமிய நாடுகள் ஸ்வீடனை கண்டித்தன.
ஸ்டாக்ஹோம் மசூதிக்கு வெளியே நடந்த சம்பவம் உட்பட நான்கு சந்தர்ப்பங்களில் மோமிகா குரானை எரித்துள்ளார். மோமிகாவோடு இணைந்து சல்வான் நஜெம் என்பவரும் குரானை எரித்துள்ளார். இதுதொடர்பாக இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பு இன்று வழங்கப்பட இருந்த நிலையில், சல்வான் மோமிகா நேற்று சுட்டுக் கொல்லப்பட்டார். பிரதிவாதியின் மரணத்தைக் காரணம் காட்டி, சல்வான் மோமிகாவின் வழக்கின் தீர்ப்பை ஸ்டாக்ஹோம் நீதிமன்றம் ஒத்திவைத்தது.
யார் இந்த சல்வான் மோமிகா?
கடந்த 2023 ரம்ஜான் அன்று ஸ்டாக்ஹோமின் மசூதிக்கு வெளியே குரானை மிதித்து, எரித்ததால் சல்வான் மோமிகா வெளியே தெரிய ஆரம்பித்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து மோமிகா பற்றி விசாரணை மேற்கொண்டதில், கிறிஸ்தவ ஆயுதக்குழுவின் தலைவராக இருந்தது தெரியவந்தது.
மேலும் மோமிகாவின் மீது போர்க் குற்றங்கள் சாட்டப்பட்டிருந்தன. கடந்த 2017- இல் மொசூலின் புறநகர்ப் பகுதியில் மோமிகா தனது ஆயுதக் குழுவை வழிநடத்தியதாக கூறப்படுகிறது. 2018-ல் அதிகாரப் போராட்டத்திற்குப் பிறகு அகதியான மோமிகா ஈராக்கை விட்டு வெளியேறியுள்ளார்.