"இன்னுயிர் துறந்த மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம்" - எடப்பாடி பழனிசாமி மரியாதை!
தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் ஜனவரி 25-ஆம் தேதி மொழிப்போர் தியாகிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. தமிழ் மொழிக்காக தங்களது உயிரை மாய்த்துக்கொண்ட தியாகிகளை நினைவுகூரும் வகையில் இன்று அவர்களுக்கு மரியாதை செய்யப்படுகிறது.
மொழிப்போர் தியாகிகளின் தினமான இன்று 1,076 சதுர அடியில் 8 அடி உயரத்தில் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ள அவர்களின் நினைவிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்த நிலையில் மொழிப்போர் தியாகிகளுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், “இந்தி மொழி ஆதிக்கத்தை எதிர்த்தும், தாய் மொழியாம் நம் தமிழ் மொழியை காக்க, தங்களின் உயிரை துச்சமென நினைத்து, வீறு கொண்டு எழுந்து கடுமையாக போராடி, தங்களின் இன்னுயிரை தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளின் வீரத்திற்கும், தியாகத்திற்கும்
எனது செம்மார்ந்த வீரவணக்கங்கள்!” என்று குறிப்பிட்டுள்ளார்.