மேலூர் சந்தையில் ஆடுகள் விற்பனை அமோகம்... ரம்ஜானை முன்னிட்டு ரூ.2 கோடிக்கு வர்த்தகம்!
மதுரை மாவட்டம் மேலூரில் வாரச் சந்தையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 2 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றுள்ளது.
மதுரை மாவட்டம் மேலூரில் வாரந்தோறும் திங்கட்கிழமை அன்று ஆட்டுச் சந்தை நடைபெறுவது வழக்கம். இச்சந்தையில் மேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் மட்டுமல்லாது தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள் தங்கள் ஆடுகளை விற்பனைக்காக இங்கு கொண்டு வருவது வழக்கம். இதனால் ஆடுகளை வாங்குவதற்காக சுற்றுவட்டார பகுதிகள் மட்டுமல்லாது திண்டுக்கல், புதுக்கோட்டை, தேனி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் இங்கு வருவார்கள். இதனால் மேலூரில் வாரந்தோறும் நடைபெறும் ஆட்டுச் சந்தையானது எப்பொழுதும் களைகட்டியே இருக்கும்.
தற்பொழுது தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் உள்ளதால் வெளி மாவட்ட மற்றும் மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் வராததால் வர்த்தகம் மந்தமான நிலையிலேயே உள்ளது. 5 கோடி ரூபாய் வரை வர்த்தகம் நடைபெறும் இடத்தில் இதுவரை 2 கோடி ரூபாய் வரை மட்டுமே வர்த்தகம் நடைபெற்றுள்ளது. மேலும் வியாபாரிகள் ஆடுகளை வாங்கும் போது அட்வான்ஸ் தொகையை மட்டும் செலுத்தி விட்டு, மீதி பணத்தை G.Pay மூலம் பண பரிவர்த்தனை செய்கின்றனர்.