சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர் கைது - பின்னணி என்ன?
சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் கைது செய்யப்பட்டதன் முழு பின்னனி விவரம் குறித்து காணலாம்.
சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தராக பணிபுரிந்து வரும் ஜெகநாதன் என்பவர் மீது அதே பல்கலைக்கழக தொழிலாளர் சங்க சட்ட ஆலோசகர் இளங்கோவன் புகார் அளித்தார். அதன்பேரில் துணைவேந்தர் ஜெகநாதனை கருப்பூர் காவல்துறையினர் கைது செய்தனர்.
முழு பின்னணி
சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ரா.ஜெகநாதன், பேராசிரியர் செ. சதீஷ், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியர் ராம்கணேஷ் மற்றும் பதிவாளர் கு.தங்கவேல் ஆகியோர் தங்களை இயக்குநர்களாகக் கொண்டு தலா 1 லட்சம் முதலீடு (மொத்த பங்கு முதலீடு 15 லட்சம்) செய்து கார்ப்பரேட் விவகாரத்துறை அமைச்சகத்தில் கடந்த செப்டம்பர் 14-ம் தேதி, சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் PUTER Foundation (Periyar University Technology Entrepreneurship and Research Foundation) என்ற நிறுவனத்தை பதிவு செய்துள்ளனர்.
இந்த நிறுவனத்தில் இளங்கலை, முதுகலை பாட படிப்புகள், சான்றிதழ் படிப்புகள், ஆராய்ச்சி படிப்புகள் கற்றுத் தரவும், செயற்கை நுண்ணறிவு (AI), Internet of Things (IoT) Augmented Reality/Virtual Reality (AR/VR) தொழில்நுட்பம், 3D பிரிண்டிங், ட்ரோன் தொழில்நுட்பம், செயற்கைக்கோள் தொழில்நுட்பம் ஆகிய 7 தொழில்நுட்ப படிப்புகளும் இங்கு கற்றுத் தரவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த படிப்புகளை பயிற்றுவிக்க பெரியார் பல்கலைக்கழக வளாகத்தையும் அதன் கட்டமைப்பையும் அனுமதியின்றி பயன்படுத்தியுள்ளதாகவும், PUTER அறக்கட்டளையில் இயக்குநர்களாக உள்ள துணை வேந்தர் உள்ளிட்டவர்கள் பொது ஊழியர்களாக இருந்தும் பல்கலைக்கழத்திலோ அல்லது தமிழக அரசிடமோ இதற்கான அனுமதி பெறவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்தது.
பல்கலை. துணைவேந்தர் ஜெகநாதன், பதிவாளர் தங்கவேல், பேராசிரியர் சதீஷ், பேரராசிரியர் ராம்கணேஷ் ஆகியோர் கூட்டு சதி செய்வது குறித்து பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்க சட்ட ஆலோசகர் இளங்கோவன் அரசுக்கு தெரியப்படுத்தியுள்ளார். இதனால் அவர் மீது கருப்பூர் காவல் நிலையத்தில் பதிவாளர் தங்கவேல் புகார் அளித்துள்ளார்.
பின்னர் இது தொடர்பாக இளங்கோவன் தனது நண்பர் சக்திவேல் என்பவருடன் நேற்று மதியம் துணைவேந்தர் ஜெகநாதனை நேரில் சந்திக்க சென்றுள்ளார். அப்போது தன் மீது பதிவாளர் தங்கவேல் கருப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தது குறித்தும், PUTER FOUDATION குறித்தும் பேச வந்துள்ளதாக இளங்கோவன் தெரிவித்துள்ளார். உடனடியாக ‘உன்னோடு நான் என்ன பேச வேண்டும். உன் சாதி புத்தியை காட்டி விட்டாயே’ என்று துணைவேந்தர் ஜெகநாதன் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து இளங்கோவன் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த கருப்பூர் காவல்துறையினர், துணைவேந்தர் ஜெகநாதனை கைது செய்துள்ளனர்.