For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தூய்மை பணியாளர்களுக்கு திருத்திய ஊதிய உயர்வை அமல்படுத்தாவிட்டால் வாரண்ட் - அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!

07:19 AM Jul 26, 2024 IST | Web Editor
தூய்மை பணியாளர்களுக்கு திருத்திய ஊதிய உயர்வை அமல்படுத்தாவிட்டால் வாரண்ட்   அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை
Advertisement

தூய்மைப் பணியாளர்களுக்கு  திருத்திய ஊதிய உயர்வை அமல்படுத்தாவிட்டால் தமிழ்நாடு உள்துறை செயலராக இருந்த அமுதா, டிஜிபி சங்கர் ஜிவால், சென்னை காவல் ஆணையராக இருந்த சந்தீப் ராய் ரத்தோர் ஆகியோருக்கு எதிராக வாரண்ட் பிறப்பிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தூய்மை பணியாளர்களாக பணியாற்றிய 1149 பேரின் பணியை வரன்முறை செய்து, 1,300 முதல் 3000 ரூபாய் வரை ஊதியம் நிர்ணயித்து 2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால், சேலம் மாவட்ட காவல் துறையில் பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கு 2,550
முதல் 3,200 ரூபாய் ஊதியம் நிர்ணயித்து 2006 ஆம் ஆண்டே அரசாணை
பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறி, தங்களுக்கும் சேலம் காவல் துறையில்
பணியாற்றியவர்களுக்கு இணையாக ஊதியம் நிர்ணயிக்க கோரி கொண்டம்மாள் உள்ளிட்ட தூய்மை பணியாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், சேலம் காவல்துறையில்
பணியாற்றுபவர்களுக்கு இணையாக, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கும் 2,550 முதல் 3,200 ரூபாய் வரை ஊதியம் நிர்ணயிக்க வேண்டுமென 2013ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்திருந்தது.

இரு நீதிபதிகள் அமர்வும், உச்ச நீதிமன்றமும் உறுதி செய்த இந்த உத்தரவை
அமல்படுத்தவில்லை எனக் கூறி, தமிழ்நாடு உள்துறை செயலாளராக இருந்த அமுதா, டிஜிபி சங்கர் ஜிவால் மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த சந்தீப் ராய்
ரத்தோர் ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இதையும் படியுங்கள் : ‘டிஜிட்டல் கைது’ எனக்கூறி மோசடியில் ஈடுபடும் மர்ம கும்பல்.. டாக்டரை மிரட்டி ரூ.59 லட்சம் கொள்ளை!

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் பி.டி.ஆஷா
அடங்கிய அமர்வு, ஆகஸ்ட் 27 ஆம் தேதிக்குள் இந்த உத்தரவை அமல்படுத்தாவிட்டால்,
தமிழக உள்துறை செயலாளராக இருந்த அமுதா, டிஜிபி சங்கர் ஜிவால் மற்றும் சென்னை
மாநகர காவல் ஆணையராக இருந்த சந்தீப் ராய் ரத்தோர் ஆகியோருக்கு எதிராக வாரண்ட் பிறப்பிக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்ற பதிவு துறைக்கு உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவு அமல்படுத்தப்பட்டு விட்டால், வாரண்ட் எதுவும் பிறப்பிக்க அவசியமில்லை எனவும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

Tags :
Advertisement