சென்னை | சைதாப்பேட்டையில் மழைநீர் தேங்கிய பகுதிகளில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு!
சென்னையில் கனமழை பெய்துவரும் நிலையில், சைதாப்பேட்டை பகுதியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார்.
சென்னையில் நேற்று (நவ.29) இரவு முதல் பெய்து கனமழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கி இருக்கிறது. முதலமைச்சரின் அறிவுறுத்தல் படி சென்னை சைதாப்பேட்டை பகுதியில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது மா.சுப்பிரமணியன் கூறியதாவது,
சைதாப்பேட்டையில் எந்த தெருவிலும் எந்த பாதிப்பும் இல்லை. அடையாறு ஆற்றில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தாலும் குடியிருப்பு பகுதிகளில் நீர் வரவில்லை. மேலும், அடையாறு கரைகளை அகலப்படுத்தி கரைகளை பலப்படுத்தியதால் அதிக கன அடி நீர் திறந்தாலும் பாதிப்பு இல்லை.
கழிவு நீர் மழை நீருடன் கலப்பது அதிக மழை பெய்யும் போது இருக்க தான் செய்யும். எந்த தெருக்களிலும் பெரிய அளவிலான பாதிப்புகள் இல்லை. ராட்சத மோட்டார்கள் போடப்பட்டு நீர் எடுக்கப்படுவதால் போக்குவரத்து பாதிப்புஉள்ளது.
பெரிய மழை பாதிப்பு இருந்தும் குடியிருப்பு பகுதிகளில் அதிகம் மின் துண்டிப்பு இல்லை. மின் கசிவு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக ஒரு சில இடங்களில் தெருவிளக்குகள் மட்டும் அணைக்கபட்டன. மருத்துவ பணியாளர்களும் தொடர்ச்சியாக பணியில் உள்ளனர். மேலும், மருத்துவர் முகாம்களும் ஒவ்வொரு வார சனிக்கிழமையும் நடைபெற உள்ளது.