“சென்னை சடையன்குப்பம் பகுதியில் கழிவுகளை கொட்டுவதை தடுக்க வேண்டும்” - மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்!
சென்னை சடையன்குப்பம் பகுதியில் தொடர்ந்து கொட்டப்படும் கழிவுகளை தடுப்பதற்காக மக்கள் நீதி மய்யம் சென்னை மாநகராட்சியிடம் முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.
இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள ட்விட்டர் (எக்ஸ்) பதிவில்,
“சென்னையில் மணலி - சடையன்குப்பம் பகுதியில், தொடர்ந்து ரயில் இருக்கைக் கழிவுகளை Indian Railways கொட்டி வரும் நிலையில், அருகாமைத் தொழிற்சாலைக் கழிவுகளும் அங்கே தொடர்ந்து கொட்டப்பட்டு வருகின்றன. சென்னை மாநகராட்சி அக்கழிவுகளை முறையாக அகற்றிக் கொண்டே வந்தாலும், அவற்றை அகற்றாத நேர இடைவெளியில் அக்குப்பை எரிக்கப்படுகிறது.
இதன் விளைவாக நச்சுப் புகை பரவி சுற்றுச்சூழலுக்கு கடும்பாதிப்பு ஏற்படுகிறது.
மேலும் இப்பகுதியில் திறந்தவெளியில் மலக்கழிவுகளும், தொழிற்சாலையின் கழிவுகளும் மண்டிக் கிடக்கின்றன. இதனால் இப்பகுதி மக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகின்றனர்.
மக்கள் நீதி மய்யத்தின் மணலி வட்டச் செயலாளர் கமலக்கண்ணன், இப்பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண, சென்னை மாநகராட்சியிடம் தொடர்ந்து முன்னெடுப்புகள் மேற்கொண்டு வருகிறார். கமலக்கண்ணனுடன், நகரச் செயலாளர் ரவீந்திரன், கிளைச் செயலாளர் V. விமல் குமார், இளைஞர் அணி வட்டச் செயலாளர் லோகதாஸ் ஆகியோர் தொடர்ந்து களப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சடையன்குப்பம் பகுதியில் தொழிற்சாலைக் கழிவுகள் கொட்டப்படுவது நிரந்தரமாக நிறுத்தப்படுவதற்கும், அப்பகுதியில் தொழிற்சாலை அருகே தங்கிப் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு போதிய கழிவறைகள் கட்டிக் கொடுக்கப்படுவதற்கும், Indian Railways இருக்கைக் கழிவுகள் கொட்டுவது தடுக்கப்படுவதற்கும், உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது. தீர்வு நோக்கிப் பயணிக்கும் திசையில் மய்யம் என்றும் உடனிருக்கும்.”
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.