சடையனேரி குளம் உடைந்து ஊருக்குள் புகுந்த வெள்ளம்: தனித்தீவான கிராமம்!
திருச்செந்தூர் அருகே சடையனேரி குளம் உடைந்ததில், உடன்குடி - பரமன்குறிச்சி சாலையில் தொடர்ந்து தண்ணீர் பாய்ந்தோடி வருவதால் அப்பகுதி சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த கனமழையால் நீரூற்றுகள், குளங்கள், ஏரிகள் என அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி காணப்படுகின்றன. இந்நிலையில், பல பகுதிகளின் கால்வாய்களும், ஏரிகளும் தண்ணீரின் கொள்ளலவாலும், வெள்ளத்தின் வேகத்தாலும் உடைந்து வருகின்றன.
அந்த வகையில், தூத்துக்குடி மாவட்டம் மெய்ஞ்ஞானபுரம் அருகே உள்ள சடையனேரி குளத்தின் தென்பகுதியில் 50 மீட்டர் அளவிற்கு உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி வருகிறது. பத்தாங்கரை வழியாக தண்டுபத்து, வெள்ளாளன்வினை வழியாக இந்த தண்ணீர் செல்கிறது. இதனால் இந்த குளத்தை சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. கிராம மக்கள் அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ள இயலாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து உடன்குடி - பரமன்குறிச்சி சாலையில் தொடர்ந்து தண்ணீர் பாய்ந்தோடி வருவதால் தண்ணீரின் வேகத்தால் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.