சபரிமலை மண்டல பூஜை தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்!
சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது.
மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐய்யப்பன் கோயில் நடை நவம்பர் 16-ம் தேதி மாலை திறக்கப்பட்டது. மறுநாள் முதல் ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். சாமி தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் திரண்ட வண்ணம் உள்ளனர். ஆன்லைன் மூலம் ஆயிரக்கணக்கானோர் முன்பதிவு செய்து தரிசனம் செய்து வரும் நிலையில், உடனடி முன்பதிவு மையங்களிலும் ஏராளமானோர் பதிவு செய்து சாமி தரிசனம் செய்கின்றனர்.
இதையும் படியுங்கள்: சென்னையை புரட்டி போட்ட கனமழை | 17 பேர் பலி!
தற்போது பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய 17 மணி நேரம் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இருந்த போதிலும் பக்தர்கள் வருகை மிகவும் அதிகமாக இருப்பதால், சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் பல மணி நேரம் காத்திருக்கும் நிலை நிலவி வருகிறது. தொடர்ந்து டிசம்பர் 27-ம் தேதி சபரிமலையில் மண்டல பூஜை நடைபெற உள்ளது. அன்றைய தினம் மண்டல பூஜை நிறைவடைந்து நடை அடைக்கப்படும். பின்னர் மீண்டும் 30-ம் தேதி மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டு 2024-ம் ஆண்டு ஜனவரி 20-ம் தேதி நடை அடைக்கப்படும்.
மேலும் 2024-ம் ஆண்டு ஜனவரி 15-ம் தேதி பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தரிசனம் நடைபெறும். இந்த நிலையில் மகர விளக்கு கால பூஜைக்கான முன்பதிவும் துவங்கியுள்ளது. பக்தர்கள் வழக்கம் போல சபரிமலையின் www.sabarimalaonline.org என்ற அதிகாரபூர்வ இணைய தளத்தில் முன்பதிவு செய்யலாம்.