சபரிமலை ஐயப்பன் கோயிலில் 38 நாட்களில் 25 லட்சம் பக்தர்கள் தரிசனம்!
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்ட 38 நாட்களில் 25.69 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நவம்பர் 16-ம் தேதி மாலை நடை திறக்கப்பட்டது. தங்க அங்கியுடன் கூடிய ஊர்வலம் நேற்று காலை ஆரன்முளா ஸ்ரீ பார்த்தசாரதி கோயிலிலிருந்து புறப்பட்ட நிலையில், நாளை மறுநாள் சபரிமலை சென்றடைந்து 27-ம் தேதி மண்டல பூஜையுடன் நிறைவடைகிறது. அன்று இரவு 10:00 மணிக்கு கோயில் நடை அடைக்கப்பட்டு மண்டலக்காலம் நிறைவு பெறும். மீண்டும் டிசம்பர் மாதம் 30-ம் தேதி மாலை மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்படும்.
பின்னர் டிசம்பர் மாதம் 31-ம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 15-ம் தேதி மகர விளக்கு பூஜைகள் நடைபெறும். அன்று மாலை 6.30 மணிக்கு மகர ஜோதி தரிசனம் செய்யப்படும். தொடர்ந்து ஜனவரி 19-ம் தேதி வரை பூஜைகள் நடைபெறும். ஜனவரி 20-ம் தேதி காலையில் பந்தளம் ராஜ குடும்ப பிரதிநிதி தரிசனத்திற்கு பின்னர் கோயில் நடை அடைக்கப்படும். அன்றுடன் நடப்பு ஆண்டு மண்டல மகரவிளக்கு சீசன் நிறைவுபெறும்.
மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்ட மறுநாள் முதல் ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். ஆன்லைன் மூலம் ஆயிரக்கணக்கானோர் முன்பதிவு செய்து தரிசனம் செய்து வரும் நிலையில், உடனடி முன்பதிவு மையங்களிலும் ஏராளமானோர் பதிவு செய்து சாமி தரிசனம் செய்கின்றனர்.
வரும் 27-ம் தேதி மண்டல பூஜையையொட்டி பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. டிசம்பர் 26-ம் தேதி 64,000 பேரும் மண்டல பூஜை நாளான 27-ம் தேதி 70,000 பேரும் ஆன்லைனில் முன்பதிவு செய்துள்ளனர். டிசம்பர் 30-ம் தேதி மீண்டும் மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கும் நிலையில், ஜனவரி 1-ம் தேதியில் 80000 பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்ட 38 நாட்களில் இதுவரை 25.69 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.