சபரிமலை | கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் - பக்தர்களுக்கு சிறப்பு பாஸ் நிறுத்தம்!
சபரி மலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளதால் பக்தர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு பாஸ் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் உலகப் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் உள்ளது. தற்போது மகர
விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டு பக்தர்களுக்கு தரிசன அனுமதி வழங்கப்பட்டு
வருகிறது. நாளொன்றுக்கு ஆன்லைன் மூலம் புக்கிங் செய்யும் 70 ஆயிரம் பக்தர்களுக்கும் மற்றும் ஸ்பார்ட் புக்கிங் மூலம் 10,000 பக்தர்களுக்கும் தரிசன அனுமதி வழங்கப்பட்டு வந்தது.
இது தவிர, பெருவழிப்பாதை வழியாக சுமார் 50 கிலோமீட்டர் தூரம் நடந்து வரும் பக்தர்களுக்கு சிறப்பு தரிசன அனுமதி வழங்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்தது. கோரிக்கைகளை தொடர்ந்து கடந்த டிசம்பர் 18ஆம் தேதி முதல் பெருவழிப்பாதை வழியாக நடந்து வரும் பக்தர்களுக்கு சிறப்பு தரிசன பாஸ்கள் வழங்கப்பட்டது. நாள் ஒன்றுக்கு சுமார் ஐந்தாயிரம் பேருக்கு இந்த பாஸ்கள் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் ஆங்கில புத்தாண்டு தினமான நேற்று சபரிமலையில் ஒரே நாளில் சுமார்
ஒரு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து இன்று காலை முதல் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் வர தொடங்கியது. அதனால் பெருவழிப்பாதை வழியாக நடைபயணமாக வரும் பக்தர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு பாஸ்கள் வழங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதனால் சுவாமிமலை, நீலிமலை, அப்பாச்சி மேடு வழியாக நடை பயணமாக வரும்
பக்தர்கள், ஸ்பாட் புக்கிங் செய்து வரும் பக்தர்கள் மற்றும் ஆன்லைன் புக்கிங் செய்து வரும் பக்தர்கள் என அனைவருக்கும் சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து சாமி தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் இன்று இரண்டாவது நாளாக தரிசன எண்ணிக்கை சுமார் ஒரு லட்சத்தை தாண்டும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.