சபரிமலை ஐயப்பன் கோயிலில் நிறைபுத்தரிசி சிறப்பு பூஜை! - இன்று மாலை நடைதிறப்பு!
சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடைபெற உள்ள நிறைப்புத்தரிசி விழாவிற்காக
நெற்கதிர்கள் தமிழ்நாடு-கேரள எல்லைப் பகுதியில் இருந்து அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் நிறை புத்தரிசி விழாவானது
வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டிற்கான நிறை புத்தரிசி விழாவானது நாளை நடைபெறயுள்ளது. இந்நிலையில், விழாவின் போது, சாமி ஐயப்பனுக்கு நெற்கதிர்களை வைத்து பூஜை செய்து அந்த நெற்கதிர்களை பக்தர்களுக்கு வழங்குவது வழக்கம்.
இந்நிலையில், நிறைப்புத்தரிசி விழாவிற்காக கேரளாவின் பல்வேறு பகுதிகளில்
இருந்து நெற்கதிர்களானது சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு
வருகின்றன. தமிழ்நாடு - கேரள எல்லைப் பகுதியில் உள்ள அச்சன் ஐயப்பன்
கோயிலில் இருந்து நிறைப்புத்தரிசி விழாவிற்காக இன்று நெற்கதிர்களானது அனுப்பி
வைக்கப்பட்டது.
இதையும் படியுங்கள் : பிரபல காபி ஷாப் கழிவறையில் ரகசிய கேமரா – பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்!
இந்த நெற்கதிர்களை சபரிமலை செல்லும் வழியில் உள்ள ஆரியங்காவு, குளத்துப்புழா
உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்து
சபரிமலைக்கு எடுத்த செல்லப்பட்டது. இதையடுத்து, நாளை அதிகாலை 5 மணியிலிருந்து சபரிமலை ஐயப்பன் கோவியில் நடைபெற உள்ள நிறை புத்தரிசி விழாவின் போது பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட நெற்கதிர்களை வைத்து பூஜை செய்து, அதனை பக்தர்களுக்கு வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.இதற்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.
இந்த நெற்கதிர்கள் பூஜை செய்யப்பட்ட பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். தொடர்ந்து வழக்கமான பூஜைகளுக்குப் பின்னர் நாளை இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும். மீண்டும் ஆவணி மாத பூஜைகளுக்காக வரும் 16ம் தேதி மாலை சபரிமலை கோயில் நடை திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.