தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் : ஆடவர் #Longjump -ல் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஜிதின் தங்கம் வென்று அசத்தல்!
சென்னையில் நடைபெற்று வரும் தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் தொடரில் ஆடவர் நீளம் தாண்டுதலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஜிதின் தங்கம் வென்றார்.
தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நேற்று (செப்.11) கோலாகலமாக தொடங்கியது. இந்த போட்டியை தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த போட்டி மூன்று நாட்கள் நடைபெறுகிறது. இந்தியாவின் 62 வீரர்கள் உட்பட தெற்காசியாவின் 7 நாடுகளில் இருந்து மொத்தம் 173 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் இந்த தடகள போட்டிகளில் கலந்து கொள்கின்றனர்.
இந்தியாவில் இருந்து கலந்துகொள்ளும் 62 பேரில் 9 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஆவர். இந்த சர்வதேச தடகள போட்டியானது 1995ஆம் ஆண்டிற்கு பிறகு, 29 ஆண்டுகள் கழித்து நடைபெறுகிறது.இந்நிலையில், தெற்காசிய ஜூனியர் தடகளத்தில் முதல் நாளான நேற்று இந்தியா 3 தங்கம், 4 வெள்ளி, 2 வெண்கலம் என மொத்தம் 9 பதக்கம் கைப்பற்றி பதக்கப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
இதையும் படியுங்கள் : "திறமையான நாடாளுமன்ற உறுப்பினராக முத்திரை பதித்தவர்" - #SitaramYechury மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்!
இந்நிலையில், தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் நீளம் தாண்டுதலில் தமிழ்நாட்டு வீரரான ஜிதின் தங்கம் வென்றார். ஆண்கள் நீளம் தாண்டுதல் இறுதிச்சுற்றில் 7.61 மீ. நீளம் தாண்டி தங்கம் வென்று அசத்தியுள்ளார். இவரைத் தொடர்ந்து இறுதிச்சுற்றில் 7.43 மீட்டர் தாண்டி இந்திய வீரர் முகமது அட்டா 2 ஆவது இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றார்.