அதிபர் புதினை ‘முட்டாள்’ என விமர்சித்த ரஷ்ய பாடகர் மர்ம முறையில் உயிரிழப்பு!
ரஷ்ய பாடகர் ஸ்ட்ரோய்கின் (59) கடந்த 5ஆம் தேதி செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகர மையத்தில் உள்ள அவரது வீட்டில், 10வது மாடியின் ஜன்னலில் இருந்து விழுந்து இறந்தார். அந்த நேரத்தில் போலீசார் அவரது வீட்டில் சோதனை மேற்கொண்டிருந்தனர். சிறிது தண்ணீர் குடித்துவிட்டு வருகிறேன் என சொல்லிவிட்டு, சமையலறை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது ஜன்னல் வழியாக குதித்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இவரது இறப்பில் மர்மம் இருப்பதாக பல தரப்பினரும் குற்றம் சாட்டி வருகின்றனர். உக்ரைனுக்கு எதிரான ரஷ்ய போரை தொடர்ந்து விமர்சித்து வந்தவர் பாடகர் ஸ்ட்ரோய்கின். கடந்த மார்ச் 2022-ல், “இந்த முட்டாள் (புடின்) தனது சகோதர நாட்டிற்கு எதிராக மட்டுமல்ல, தனது சொந்த மக்களுக்கு எதிராகவும் போரை அறிவித்தார். அவர் இறக்க நான் விரும்பவில்லை. அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என ஸ்ட்ரோய்கின் கூறியிருந்தார்.
மேலும் கடந்தாண்டு பிப்ரவரியில், சைபீரியாவின் வடக்குப் பகுதியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது, ரஷ்ய எதிர்க்கட்சியின் முக்கிய ஆர்வலர் லெக்ஸி நவால்னி மர்மமான முறையில் இறந்தார். இந்த சம்பவத்தின்போதும் புதின் மற்றும் ரஷ்ய ஆளும் கட்சியினரை பாடகர் ஸ்ட்ரோய்கின் குற்றம் சாட்டியிருந்தார்.
உக்ரைனில் போர் வெடித்ததிலிருந்து ரஷ்ய அரசாங்கத்தையும், அதிபர் புதினையும் தொடர்ந்து விமர்சித்து வந்தார். இதனையடுத்து உக்ரேனிய இராணுவத்திற்கு நிதியுதவி அளித்ததாக குற்றம் சாட்டப்பட்டு, போலீஸ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்தார். இதுதொடர்பான விசாரணையின் போது அவர் உயிரிழந்துள்ளார்.
ரஷ்யாவில் சமீப காலமாகவே இதுபோன்ற மரணங்கள் தொடர்கின்றன. ரஷ்ய கூட்டாட்சி நம்பிக்கைக்கு எதிரான அமைப்பின் (FAS) கரேலியா குடியரசுக் கிளையின் தலைவரான 56 வயதான ஆர்தர் பிரியாகின், 4ஆம் தேதி நண்பகல் வேளையில் தனது பெட்ரோசாவோட்ஸ்க் வீட்டின் ஐந்தாவது மாடியில் உள்ள ஜன்னலிலிருந்து விழுந்து இறந்தார்.
அதே நாளில், ரஷ்ய புலனாய்வுக் குழுவின் தடயவியல் மையத்தின் தலைவரான அலெக்ஸி சுப்கோவ், மாஸ்கோவில் உள்ள அலுவலக கட்டிடத்தின் நான்காவது மாடியில் இருந்து விபத்துக்குள்ளானார். பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இதேப்போல், கடந்த 2024 நவம்பர் மாதம் அதிபர் புதினை விமர்சித்த ரஷிய நடனக் கலைஞரான விளாடிமிர் ஷ்க்ளியாரோவ் என்பவர் ஓர் கட்டடத்தின் 5வது தளத்திலிருந்து மர்மமான முறையில் கீழே விழுந்து பலியானார்.