ரஷ்ய அதிபர் தேர்தல் - விளாமிடிர் புதின் சுயேட்சையாக போட்டி..?
ரஷ்ய அதிபர் தேர்தலில் தற்போது அதிபராக இருக்கும் விளாடிமிர் புதின் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ரஷ்யாவின் அதிபர் தேர்தல் அடுத்த ஆண்டு மார்ச் 17ம் தேதி நடைபெறும் கடந்த வாரம் அறிவிப்பு வெளியானது. ரஷ்ய நாடாளுமன்றத்தின் மேல்சபை தலைவர் வாலென்டினா மாட்வியென்கோ தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதற்கான ஒப்புதலை நாடாளுமன்ற மேல்சபை உறுப்பினர்கள் ஒருமனதாகவே அளித்ததாக செய்திகள் வெளியாகின.
ரஷ்யாவின் மிகவும் பிரபலமான எதிர்க்கட்சி அரசியல்வாதியான அலெக்ஸி நவல்னி சிறையில் இருப்பதால், அவரால் இத்தேர்தலில் போட்டியிட இயலாது. இதனால் புதின் போட்டியிட்டால் தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவார் என கூறப்படுகிறது. மேலும் அரசியல் சாசனத் திருத்தத்தின்படி விளாடிமிர் புதினால் 2036-ஆம் ஆண்டு வரை ரஷிய அதிபராகத் தொடர முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது
இது குறித்து ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில் தெரிவித்துள்ளதாவது..
ரஷ்யாவில் வரும் மார்ச் 17-ஆம் தேதி நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் விளாடிமிர் புதின் ஆளும் ஐக்கிய ரஷியா கட்சியின் சார்பில் போட்டியிடப்போவதில்லை. அவருக்கு அந்தக் கட்சி முழு ஆதரவு அளித்தாலும், அவர் சுயேச்சை வேட்பாளராகவே போட்டியிடவிருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ரஷ்யாவில் சுமார் 25 ஆண்டுகளாக ஆட்சி செலுத்தி வரும் புதின், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 17-ஆம் தேதி நடக்கவிருக்கும் அதிபர் தேர்தலில் 5-ஆவது முறையாகப் போட்டியிடுகிறார். அதற்கு வசதியாக, ஏற்கெனவே நாடாளுமன்றத்தில் அரசியல் சாசனத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்தத் திருத்தத்தின் கீழ் அவரால் மேலும் 2 முறை அதிபர் தேர்தலில் போட்டியிட்டு, வரும் 2036-ஆம் ஆண்டு வரை ரஷிய அதிபராகத் தொடர முடியும்.
உக்ரைன் போரினால் ரஷ்ய மக்கள் பொருளாதாரப் பின்னடைவை சந்தித்தும், துணை ராணுவப் படையான வாக்னர் குழுவினர் புதின் அரசுக்கு எதிரான ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபட்ட போதிலும் விளாடிமிர் புதினுக்கு மக்களிடையே அதிக ஆதரவு உள்ளதால் இந்தத் தேர்தலில் அவர் வெற்றி பெறுவது உறுதி என பெரும்பான்மை கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.