நிலநடுக்கத்திலும் அறுவை சிகிச்சையைத் தொடர்ந்த ரஷ்ய மருத்துவர்கள் - வைரல் வீடியோ!
ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் இன்று (ஜூலை 30, 2025) ஏற்பட்ட 8.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் போதும், ஒரு மருத்துவக் குழு அறுவை சிகிச்சை செய்த நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இச்சம்பவம் இணையவாசிகள் மத்தியில் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.
மருத்துவர்கள் 'பூமியில் கடவுள்கள்' என்று போற்றப்படுவது வழக்கம். மக்களை மரணத்திலிருந்து காப்பாற்றுவது, வலியிலிருந்து விடுவிப்பது என கடவுளிடம் வேண்டப்படும் ஒரு வரமாகவே பார்க்கப்படுகிறது. சிசிடிவி காட்சிகளிலிருந்து எடுக்கப்பட்ட இந்த வீடியோவில், நிலநடுக்கத்தால் அறுவை சிகிச்சை அறை கட்டுப்பாடில்லாமல் குலுங்கியபோது, ஒரு மருத்துவக் குழு தங்கள் அறுவை சிகிச்சையைத் துணிச்சலாகத் தொடர்வது பதிவாகியுள்ளது.
மருத்துவர்கள் தைரியமாக, நோயாளி அதிகமாக அசையாமல் இருக்க அவரைப் பாதுகாத்து, தங்கள் பணியைத் தொடர்ந்தனர். இந்த வீடியோ வைரலாகப் பரவி இணையத்தில் பலரது பாராட்டை பெற்றது. கிடைத்த தகவல்களின்படி, நோயாளி நலமாக இருப்பதாக சுகாதார அமைச்சகம் பின்னர் தெரிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து இந்த வீடியோ 'RT_com' என்ற X கணக்கில் இன்று பகிரப்பட்டது. இந்த பதிவு அதிகமான லைக்குகளைப் பெற்று, மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த நிலநடுக்கம் கடலின் அடியில் 74 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது. இதன் தாக்கம் செவரோ-குரில்ஸ்க், பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-கம்சாட்ஸ்கி மற்றும் சாகலினைச் சுற்றியுள்ள பல குடியிருப்புகளிலும் உணரப்பட்டது. மேலும் அடுத்த சில மணிநேரங்களில் ரஷ்யாவின் கிழக்குப் பகுதிகளில் 14 குறிப்பிடத்தக்க நிலநடுக்கங்கள் அடுத்தடுத்து பதிவாகின.