காரை மாறி மாறி ஓட்டிய ரஷ்ய, வடகொரிய அதிபர்கள்!
ரஷ்ய தயாரிப்பான லிமோசின் காரை வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னுக்கு பரிசாக வழங்கினார் விளாதிமிர் புடின். இருநாட்டு அதிபர்களும் அந்த காரில் பயணித்ததுடன், இருவரும் மாறி மாறி அந்த காரை ஓட்டி பார்த்தனர்.
வட கொரியாவுக்கு 24 ஆண்டுகளுக்கு பின்னர் பயணம் மேற்கொண்டுள்ள ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடின் அந்நாட்டு அதிபர் கிம் ஜோங்-உன்னுக்கும் இடையே புதிய முக்கியத்துவம் வாய்ந்த ராணுவ ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இரு நாடுகளில் ஏதேனும் ஒரு நாடு தாக்குதலுக்கு இலக்கானால் மற்றொரு நாடு கைகொடுக்க வேண்டும் என்கிறது இந்த ஒப்பந்தம்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விளாதிமிர் புடின் “ரஷியாவுக்கும் வடகொரியாவுக்கும் இடையே அனைத்து விவகாரங்களையும் உள்ளடக்கிய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் இடம் பெற்றுள்ள அம்சங்களில், எதிரி நாடுகளின் தாக்குதலுக்குள்ளாகும்போது பரஸ்பரம் ராணுவ உதவி செய்துகொள்ளும் அம்சமும் இடம் பெற்றுள்ளது.
இந்த ஒப்பந்தம் தற்காப்புக்கானது மட்டுமே. தனது எல்லைகளைப் பாதுகாத்துக்கொள்ளும் வட கொரியாவின் உரிமை நிலைநாட்டப்படுவதை இந்த ஒப்பந்தம் உறுதி செய்கிறது.
வடகொரியாவுடன் ராணுவ தொழில்நுட்ப மேம்பாட்டு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை ரஷியா மேற்கொள்வதற்கான வாய்ப்புகளும் உள்ளன” என தெரிவித்தார்.
இதனையடுத்து, பேசிய கிம் ஜோங் “இரு நாடுகளுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்டதிலேயே மிகவும் ஆற்றல் வாய்ந்த ஒப்பந்தம் இது. ரஷியாவுக்கும், வடகொரியாவுக்கும் இடையே இதுவரை இருந்து வந்த நட்புறவை இந்த ஒப்பந்தம் கூட்டணியாக உயர்த்தியுள்ளது. இருதரப்பு அரசியல், பொருளாதாரம், ராணுவ ஒத்துழைப்பை ஊக்குவிக்கும் இந்த ஒப்பந்தம், பன்முகத் தன்மை நிறைந்த புதிய உலகைப் படைப்பதற்கு உதவும்” என்றார்.
பின்னர் ரஷ்ய தயாரிப்பான லிமோசின் காரை வடகொரிய அதிபர் கிம் ஜோங்குக்கு பரிசாக வழங்கினார் விளாதிமிர் புடின். இருநாட்டு அதிபர்களும் அந்த காரில் பயணித்தனர். அப்போது இருவரும் மாறி மாறி அந்த காரை ஓட்டி பார்த்தனர். ரஷ்ய அதிபர் புதினுக்கு வளர்ப்பு நாய் குதிரைகளை வழங்கினார் கிம் ஜோங் உன்.