#War- உக்ரைன் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் - 49 பேர் பலி; 219 பேர் படுகாயம்!
உக்ரைன் மீது ரஷ்யா பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல் நடத்தியதில், 49 பேர் உயிழந்துள்ளனர். 210க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
உக்ரைனின் பொல்டாவா பகுதியில் உள்ள மருத்துவமனை மற்றும் கல்வி நிலையத்தின் மீது, ரஷ்யா பாலிஸ்டிக் ஏவுகணைகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 49 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 219 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இந்த தாக்குதல் குறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது;
“பொல்டாவாவில் ரஷ்ய தாக்குதல் குறித்த தகவல்களை பெற்றேன். இத்தாக்குதலில் ரஷ்யா இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணையை பயன்படுத்தி உள்ளது. கல்வி நிலையம் மற்றும் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தி, அந்நிறுவனங்களின் பகுதியளவை அழித்துள்ளது. இடிபாடுகளுக்கு அடியில் மக்கள் சிக்கிக் கொண்டனர். பலர் மீட்கப்பட்டனர், ஆனால் 180 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். துரதிர்ஷ்டவசமாக, பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. தற்போது 41 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் கிடைத்துள்ளன. அவர்களின் அன்புக்குரியவர்களுக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்.
என்ன நடந்தது என்பதை அறிய, முழுமையான மற்றும் விரைவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன். மீட்பு பணியில் தேவையான அனைத்து சேவைகளும் ஈடுபட்டுள்ளன. தாக்குதலை தொடர்ந்து உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் நன்றி. இந்த தாக்குதலுக்கு ரஷ்யா நிச்சயம் பதில் சொல்லும். இந்த பயங்கரவாதத்தை தடுக்கும் திறன் கொண்ட அனைத்து நாடுகளையும் நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். உக்ரைனுக்கு இப்போது வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் ஏவுகணைகள் தேவை” என குறிப்பிட்டுள்ளார்.
தாக்குதலுக்கு பின்னர் தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் தொடர்ந்து வருகின்றன. இறப்பு எண்ணிக்கை தற்போது வரை 49ஐ எட்டியுள்ளது. தொடர்ந்து அதிகரிக்கும் எனவும் அஞ்சப்படுகிறது. கடந்த பிப்.,24 2022-ம் தேதி துவங்கிய ரஷ்யா உக்ரைன் போர் இரண்டு ஆண்டு காலத்திற்கும் மேலாக நீடித்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் உக்ரைன் ரஷ்யா மீது தாக்குதல் நடத்தியது. இந்நிலையில் ரஷ்யா உக்ரைன் மீது தாக்குதல் நடத்தியது.