ரூ.7,755 கோடி மதிப்புடைய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் இன்னும் திரும்பப்பெறப்படவில்லை! - ரிசர்வ் வங்கி அறிவிப்பு!
ரூ.7,755 கோடி மதிப்புடைய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் இன்னும் திரும்பப்பெறப்படவில்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டு மே 19 ஆம் தேதி 2,000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. வங்கிகளில் அந்த ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்யுமாறும், அவற்றை கொடுத்து விட்டு ரூ.100, ரூ. 200, ரூ. 500 நோட்டுகளை பெற்றுக் கொள்ளுமாறும் அறிவித்தது. இதற்கு கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி வரையும் அவகாசம் வழங்கப்பட்டது.
2,000 நோட்டுகளை திரும்ப பெறுவதாக அறிவித்த போது புழக்கத்தில் இருந்த 2,000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பு ரூ. 3.56 லட்சம் கோடி. இதனையடுத்து கடந்த ஏப்ரல் மாத நிலவரப்படி பொதுமக்களிடம் புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகளில், 97.76 சதவீதம் திரும்பப்பெறப்பட்டதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது.
இந்நிலையில் இதுவரை 97.82 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இன்னும் 2.2 சதவீத நோட்டுகள் திரும்பப் பெற வேண்டும் என்றும், இதன் மதிப்பு ரூ. 7,755 கோடி எனவும் தெரிவித்துள்ளது.