ரூ.538 கோடி வங்கிக் கடன் மோசடி விவகாரம்: ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் மீது அமலாக்கத் துறை நடவடிக்கை!
கனரா வங்கியில் ரூ.538 கோடி கடன் மோசடி செய்ததாகக் குற்றஞ்சாட்டப்படும் வழக்கில், ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் மீது டெல்லி நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
ஜெட் ஏர்வேஸ் (இந்தியா) நிறுவனம் ரூ.538 கோடி கடன் மோசடி செய்ததாக சிபிஐயிடம் கனரா வங்கி புகார் அளித்தது. இந்தப் புகார் தொடர்பாக அதன் நிறுவனர் நரேஷ் கோயல், அவரின் மனைவி அனிதா, அந்த நிறுவனத்தின் முன்னாள் நிர்வாகிகள் உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.
இந்த வழக்கை அடிப்படையாகக் கொண்டு, நீண்ட விசாரணைக்கு பிறகு சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து கடந்த செப். 1-ம் தேதி நரேஷ் கோயலை கைது செய்தது. தற்போது அவர் நீதிமன்றக் காவலில் மும்பை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், நரேஷ் கோயல் உள்ளிட்டோருக்கு எதிராக மும்பை நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அந்தக் குற்றப்பத்திரிகையை நீதிமன்றம் விரைவில் கவனத்தில் எடுத்துக்கொள்ள வாய்ப்புள்ளதாக வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்தார்.
கடந்த ஏப்ரல் 2019-ம் ஆண்டு ஜெட் ஏர்வேஸ் தனது செயல்பாடுகளை நிறுத்தியது. நரேஷ் கோயல் விமான நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து கடந்த மார்ச் மாதம் விலகியது குறிப்பிடத்தக்கது.