பஹல்காம் தாக்குதலில் இறந்த மராட்டியர்களின் குடும்பத்தினருக்கு ரூ.50 லட்சம் நிதியுதவி - முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் அறிவிப்பு!
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்த மகாராஷ்டிராவைச் சேர்ந்த 6 பேரின் குடும்பத்திற்கு தலா 50 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் அறிவித்துள்ளார். இடைக்கால இழப்பீடாக ரூ.5 லட்சம் வழங்குவதாகவும் அறிவித்துள்ளார். மேலும் தாக்குதலில் உயிரிழந்த சந்தோஷ் ஜக்தலே என்பவரின் மகள் அசவரி ஜக்தலேவுக்கு அரசு வேலையும் வழங்கப்பட உள்ளது.
மேலும் பயங்கரவாதிகளை எதிர்த்து குரல் கொடுத்ததற்காக கொல்லப்பட்ட குதிரை ஓட்டி சையத் அடில் உசேன் ஷாவின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இழப்பீடு அறிவித்தார் துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே. இன்று நடைபெற்ற மகாராஷ்டிராவின் அமைச்சரவைக் கூட்டத்திற்கு பிறகு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த 22ஆம் தேதி நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் 26 பேர் பலியாகினர். இந்த தாக்குதல் இந்தியாவில் மட்டுமல்லாமல், உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதல் தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. நாளை இதுதொடர்பாக பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டம் இரண்டாவது முறையாக கூடுகிறது.