For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.3,000 உதவித்தொகை வழங்க வேண்டும்!” - தமிழ்நாடு அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

05:24 PM Jan 14, 2024 IST | Web Editor
“வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ 3 000 உதவித்தொகை வழங்க வேண்டும் ”   தமிழ்நாடு அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்
Advertisement

தமிழ்நாட்டில் வேலையில்லாமல் இருக்கும் பட்டதாரிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement

கர்நாடக மாநிலத்தில் பட்டப்படிப்பை முடித்து 6 மாதங்கள் வேலையில்லாமல் இருக்கும்
பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.3000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தை கர்நாடக அரசு
தொடங்கியிருக்கிறது. தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் திட்டத்தை மேம்படுத்தி,
அதிக எண்ணிக்கையிலானவர்களுக்கு உதவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ்நாடு அரசு இன்று வரை ஏற்றுக்கொள்ள மறுப்பது வருத்தமளிக்கிறது.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் சார்பில் அளிக்கப்பட்ட 5 முதன்மை வாக்குறுதிகளில், மகளிர் நலன் சார்ந்த நான்கு வாக்குறுதிகளை ஏற்கனவே
நிறைவேற்றி விட்ட சித்தராமையா தலைமையிலான அரசு, இப்போது பட்டதாரி இளைஞர்களின் நலன் சார்ந்த ஐந்தாவது வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளது. படித்து பட்டம் பெற்று 6 மாதங்களாகியும் வேலை பெறாத இளைஞர்களுக்கு மாதம் ரூ.3,000 வீதமும், பட்டயப்படிப்பு முடித்த இளைஞர்களுக்கு மாதம் ரூ.1,500 வீதமும் வழங்கும்
திட்டம் தான் இது.

ஓர் இளைஞர் பட்டம் பெற்று 6 மாதங்களில் ஏதேனும் வேலைவாய்ப்போ, உயர்கல்வி பயிலும் வாய்ப்போ கிடைக்காதபோது, அவர்களுக்கு இந்த உதவித் தொகை வழங்கப்படும். இது படித்த இளைஞர்களின் எதிர்காலத்தை சிறப்பாக்கும் நோக்குடன் சரியான நேரத்தில், சரியான முறையில் செய்யப்படும் உதவியாகும். படித்து பட்டம் பெற்ற இளைஞர்கள் அடுத்த 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு போட்டித்தேர்வுகளையும், குடிமைப்பணி தேர்வுகளையும் எழுதுவதில் ஆர்வம் காட்டுவார்கள்.

அதைப் புரிந்து கொண்டு, அவர்கள் போட்டித்தேர்வுகளை எழுதுவதற்காக செய்யும் செலவில் ஒரு குறிப்பிட்டத் தொகையை ஈடுகட்டும் வகையில் பட்டம் பெற்றதிலிருந்து 6 மாதத்தில் தொடங்கி அடுத்த இரு ஆண்டுகளுக்கு இவ்வுதவியை கர்நாடக அரசு வழங்கவுள்ளது. கர்நாடக அரசின் இந்த தொலைநோக்குப் பார்வை பாராட்டத்தக்கது.

தமிழ்நாட்டிலும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தை இதே போல் மாற்றியமைக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. ஆனால், தமிழ்நாடு அரசோ யாருக்கும் பயனற்ற வகையில், 17 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட உதவித்தொகை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தையும், கர்நாடகத்தில் செயல்படுத்தப்படும் திட்டத்தையும் எந்த
வகையிலும் ஒப்பிட முடியாது. தமிழ்நாடு அரசின் திட்டம் பயனற்ற திட்டமாகும்.

கர்நாடகத்தில் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு மாதம் ரூ.3000 வழங்கப்படும்
நிலையில், தமிழ்நாட்டில் மாதம் ரூ.600 மட்டுமே, அதாவது கர்நாடகத்தில்
வழங்கப்படுவதில் ஐந்தில் ஒரு பங்கு மட்டும் தான் வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் பட்டயப்படிப்பு படித்தவர்களுக்கு எந்த உதவியும் வழங்கப்படுவதில்லை. மாறாக பத்தாம் வகுப்பில் தோல்வியடைந்தவர்களுக்கு மாதம் ரூ.200, 12 ஆம் வகுப்பு தேறியவர்களுக்கு ரூ.400 வழங்கப்படுகிறது. தமிழ்நாடு அரசு வழங்கும் தொகை பட்டதாரிகளுக்கு எவ்வகையிலும் உதவாது.

கர்நாடகத்தில் பட்டப்படிப்பை முடித்த 6 மாதங்களில் இந்த உதவித் தொகை
வழங்கப்படுகிறது. அந்த பருவம் தான் போட்டித் தேர்வுகளை முழுவீச்சில்
எழுதுவதற்கான காலகட்டம் ஆகும். அவர்கள் போட்டித்தேர்வுகளை எழுதவும்,
தயாராகவும் இந்த உதவித்தொகை பயனுள்ளதாக இருக்கும். ஆனால், தமிழ்நாட்டில்
பட்டப்படிப்பை முடித்து 5 ஆண்டுகள் வேலையில்லாமல் இருந்ததை நிரூபித்த பிறகு
தான் உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கவே முடியும். அவர்களுக்கு உதவித்தொகை
கிடைக்கும் போது அவர்கள் படிப்பை முடித்து குறைந்தது 8 ஆண்டுகள்
ஆகியிருக்கும்.

அதற்குள்ளாக வேலையில்லாத இளைஞர்கள், போட்டித்தேர்வு எழுதும்
ஆர்வத்தையும், மன உறுதியையும் இழந்திருப்பார்கள். அந்த நேரத்தில் அவர்களுக்கு
வழங்கப்படும் உதவித் தொகையால் எந்த வகையிலும் பயன் கிடைக்காது. கர்நாடகத்தில் முதற்கட்டமாக நடப்பாண்டில் 70 ஆயிரம் பேருக்கு இந்த உதவித் தொகை
வழங்கப்படுகிறது. இது விரைவில் ஒரு லட்சமாக உயர்த்தப்படவுள்ளது. மொத்தம்
இரு ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என்பதால், அடுத்த ஆண்டில் புதிதாக
பட்டம் பெற்ற மேலும் ஒரு லட்சம் பேர் இந்தத் திட்டத்தில் சேருவார்கள்.

அப்போது, பயனாளிகளின் எண்ணிக்கை 2 லட்சமாக உயரும். ஆனால், தமிழ்நாட்டில் 17
ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தின்படி மொத்தமாகவே 55 ஆயிரம்
பேருக்கு மட்டுமே உதவித்தொகை வழங்கப்படுகிறது. இது வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து வேலைக்காக காத்திருக்கும் 70 லட்சம் பேரில் ஒரு
விழுக்காட்டுக்கும் குறைவு ஆகும். தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் 2006-ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. அதற்குப் பிந்தைய 17ஆண்டுகளில் உதவித்தொகை உயர்த்தப்பட வில்லை.

அப்போது அறிவிக்கப்பட்ட அதே ரூ.600 தான் இன்று வரை வழங்கப்பட்டு வருகிறது. அதுவும் கூட பல்வேறு காரணங்களைக் காட்டி கடந்த சில மாதங்களாக நிறுத்தப்பட்டதாக தெரிகிறது. படித்து வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு வழங்கப்படும் உதவி என்பது அவர்களின் உயர்வுக்கும், வேலைவாய்ப்புக்கும் உதவுவதாக இருக்க வேண்டும்.
அதற்கேற்ற வகையில் கர்நாடகத்தில் இருப்பது போன்று இத்திட்டத்திற்கான
நிபந்தனைகளை தளர்த்தி பயனாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.

அத்துடன் பத்தாம் வகுப்பில் தோல்வியடைந்தோருக்கு ரூ.1,000, தேர்ச்சி பெற்றோருக்கு
ரூ.2,000, 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றோருக்கும், பட்டயப்படிப்பு
படித்தவர்களுக்கும் தலா ரூ.3,000, பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு ரூ.4,000,
பட்டமேற்படிப்பு முடித்தவர்களுக்கு ரூ.5,000 வீதம் உதவித்தொகையை உயர்த்தி
வழங்க வேண்டும்.  அதன்மூலம் படித்த இளைஞர்களின் வாழ்வில் தமிழ்நாடு அரசு ஒளி
விளக்கேற்ற வேண்டும் என வலியுறுத்துகிறேன் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement