“பாஜக அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொண்டதில் ரூ.25,236 கோடி நஷ்டம்” - அமைச்சர் மனோ தங்கராஜ் பதிவு!
கடந்த 10 ஆண்டு பாஜக ஆட்சியில் 2 முறை இந்தியாவில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொண்டதில் ரூ.25,236 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் மனோ தங்கராஜ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,
“10 ஆண்டு பாஜக ஆட்சியில் 2 முறை பணமதிப்பிழப்பு - பண அச்சடிப்பின் மூலம் மட்டும் இந்தியாவிற்கு ரூ.25,236 கோடி நட்டம் பயன் : 0 மூட்டைப்பூச்சியை ஒழிக்க வீட்டை கொளுத்திய அறிவாளியின் புது அவதாரம் தான் “நரேந்திர மோடி”. இந்திய பொருளாதாரத்தின் இரத்த ஓட்டம் எனப்படுவது ரொக்கப்பணம். இந்தியாவின் 86.9% ரொக்கப்பணம் நவம்பர் 8, 2016 அன்று இந்தியாவில் 3 நோக்கங்களுக்காக மதிப்பிழப்பு செய்யப்பட்டது.
1. புழக்கத்தில் இருந்த போலி ரூபாய் நோட்டுகளை ஒழிப்பது.
2. கணக்கில் வராத கருப்புப்பணத்தை ஒழிப்பது.
3. போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளை தடுப்பது.
வெகுசிலரிடம் மட்டுமே இருந்த கருப்பு பணத்தை கண்டறிந்து மீட்டெடுப்பதையும், இந்தியாவில் உள்ள 487 விமான நிலையம் மற்றும் 229 துறைமுகங்கள் வழியாக வரும் போதைப்பொருட்களை தடுப்பதையும், போலி ரூபாய் நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விடுபவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதையும் விட்டுவிட்டு, இந்தியாவில் வாழும் 140 கோடி மக்களையும் சந்தேகப்பட்டு பணமதிப்பிழப்பு என்னும் பேயை ஏவிவிட்டார் பிரதமர் மோடி.
https://x.com/Manothangaraj/status/1793665734180323837
இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட இந்துக்கள் மரணமடைந்தனர் - 15 கோடி இந்து தினக்கூலி பணியாளர்களின் வாழ்வாதாரம் பல வாரங்கள் முடக்கப்பட்டது - லட்சக்கணக்கான இந்துக்களின் தொழில்கள் வீழ்ச்சியடைந்தன - பல லட்சம் இந்துக்கள் உணவு இன்றி தவித்தனர் - 50 லட்சம் இந்து இளைஞர்களின் வேலைவாய்ப்பு பறிக்கப்பட்டது - கோடிக்கணக்கான இந்துக்கள் பாதிக்கப்பட்டனர் - இந்துக்களை ஏமாற்ற 50 நாளில் தீக்குளித்து தற்கொலை செய்யப்போவதாக நாடகமாடினார். இறுதியில் இந்திய பொருளாதாரத்தில் 2.25 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது.
கடந்த 10 ஆண்டு பாஜக ஆட்சியில் 2 முறை இந்தியாவில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 2016-ல் 500, 1000 ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு செய்யப்பட்டன. 2023-ல் 2000 ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு செய்யப்பட்டன. இவ்விரண்டு நிகழ்வுகளின் மூலம் இந்தியாவிற்கு ஏற்பட்ட நேரடி நட்டம் ரூ.2,52,36,00,00,000 [இருபத்தைய்யாயிரத்து, இருநூற்று முப்பத்தி ஆறு கோடி].
https://x.com/news7tamil/status/1793825252822429716
பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது அரசு முன்வைத்த 3 நோக்கங்களிலும் படுதோல்வியை சந்தித்துள்ளது. கருப்பு பணம் ஒழியவில்லை; ஊழல் ஒழியவில்லை, கள்ளநோட்டுகளின் புழக்கம் அதிகரித்துள்ளது; தீவிரவாத செயல்கள் வழக்கம் போல நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஆனால், அரசு பணமதிப்பிழப்பிற்காக செலவிட்ட தொகை, பண அச்சடிப்பு செலவு, மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள், ஆகியவற்றின் மூலம் நாட்டுக்கு ஏற்பட்ட இழப்பு பல லட்சம் கோடி”
இவ்வாறு பதிவிட்டுள்ளார்.