“ரூ.24 கோடி இழப்பு!” சிஏஜி அறிக்கையால் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் பி.டி.உஷாவுக்கு சிக்கல்!
ரிலையன்ஸ் இந்தியா லிமிடெட் (ஆர்ஐஎல்) உடனான தவறான ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தம் இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு 24 கோடி ரூபாய் இழப்புக்கு வழி வகுத்துள்ளதாக சிஏஜி அறிக்கை தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஆகஸ்ட் 1, 2022 தேதியிட்ட ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தத்தின் விதிமுறைகளின்படி, ஆசிய விளையாட்டுப் போட்டிகள் (2022, 2026), காமன்வெல்த் விளையாட்டு (2022, 2026), 2024 பாரிஸ் ஒலிம்பிக் மற்றும் 2028 ஒலிம்பிக்கின் அதிகாரப்பூர்வ முதன்மைப் பங்குதாரரான இந்திய ஒலிம்பிக் சங்கத்துடன் இணைவதற்கு ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு உரிமை வழங்கப்பட்டுள்ளது.
மேலும் டிசம்பர் 5, 2023 அன்று திருத்தப்பட்ட ஒப்பந்தத்தின் மூலம், குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் (2026, 2030) மற்றும் யூத் ஒலிம்பிக் போட்டிகள் (2026, 2030) ஆகியவற்றுக்கான கூடுதல் உரிமைகளும் வழங்கப்பட்டதாக சிஏஜி அறிக்கை கூறியது. மேலும் இந்த தகவலின் படி, இந்திய ஒலிம்பிக் சங்க நலன் கருத்தில்கொள்ளப்படவில்லை என்பது தெளிவாகுவதாக, சிஏஜி அறிக்கை கூறுகிறது.
குறிப்பாக உரிமைத் தொகை ரூ.59 கோடியாக உயர்த்தப்பட வேண்டிய நிலையில் ரூ.35 கோடி மட்டுமே நிர்ணயிக்கப்பட்டு தவறான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதால், இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு ரூ.24 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று சிஏஜி அறிக்கை கூறுகிறது. மேலும் இந்த விவகாரம் குறித்து இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பி.டி.உஷா பதில் அளிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டிப்பது பேசுபொருளாகியுள்ளது.