விஞ்ஞானி வீட்டில் ரூ.2.5 லட்சம் பணம் கொள்ளை - குப்பைத் தொட்டியில் மறைத்து வைத்திருந்த 50சவரன் நகை தப்பியது!
விஞ்ஞானி வீட்டில் ரூ.2.5 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில் குப்பைத் தொட்டியில் 50சவரன் நகை மறைத்து வைத்திருந்த நிலையில் திருடன் கண்ணில் படாமல் தப்பியதால் நிம்மதி அடைந்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள பார்வதிபுரம் பெருமாள் நகரில் வசித்து வருபவர் ரமேஷ் செல்லசாமி ( 70 ) , இவர் புனேவில் உள்ள தேசிய வேதியியல் ஆராய்ச்சி மையத்தில் விஞ்ஞானியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் உடல்நிலை சரியில்லாமல் கடந்த செவ்வாய்க்கிழமை மருத்துவமனைக்கு சென்று அங்கேயே சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்த நிலையில் இன்று அவரது வீட்டிற்கு வழக்கம் போல் வேலைக்கு வந்த பெண் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து, உடனடியாக வீட்டின் உரிமையாளர்களுக்கு தகவல் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து ரமேஷ் செல்லசாமி வீட்டிற்கு வந்து பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் சுமார் ஐந்து சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.
மேலும் பீரோவில் வைக்காமல் அலமாரி, குப்பைதொட்டி உள்ளிட்ட இடங்களில் சாதாரணமாக வைத்திருந்த சுமார் 50 சவரன் நகைகள் திருடன் கண்ணில் படாததால் நகைகள் தப்பியுள்ளது. இது குறித்து ஆசாரிப்பள்ளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் போலீசார் கைரேகை மற்றும் தடயங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து வீட்டில் உள்ள சிசிடிவி கேமராக்களை உடைக்கப்பட்டு அதிலிருந்த DVR பெட்டியையும் திருடர்கள் தூக்கி சென்றுள்ளனர்.