தனியார் வங்கியின் ஏடிஎம்-ல் நூதன முறையில் ரூ.13 லட்சம் கொள்ளை!
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை மெயின் ரோட்டில் அமைந்துள்ள தனியார் வங்கியின் ஏடிஎம்- இல் இருந்து நூதன முறையில் மர்ம நபர்கள் ரூ.13 லட்சத்தை கொள்ளையடித்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை மெயின் ரோட்டில் அமைந்துள்ளது சௌவுத் இந்தியன்
வங்கி. வங்கியின் அருகிலேயே ஏடிஎம்மும் அமைந்துள்ளது. இந்த ஏடிஎம்மில் ஐந்து நாட்களுக்கு ஒருமுறை பணம் நிரப்புவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இந்நிலையில், ஏடிஎம்க்கு பணம் நிரப்பும் ஊழியர்கள் கடந்த ஆறாம் தேதி மாலை ரூ.23,35,300 பணத்தை நிரப்பியுள்ளனர். பணம் நிரப்பி இரண்டு நாட்களே ஆனநிலையில் ஏடிஎம்-இல் பணம் இல்லை என்று வந்துள்ளது. இதனையடுத்து வாடிக்கையாளர்கள் வங்கியில் புகாரளித்துள்ளனர்.
புகாரின் பேரில் வங்கி அதிகாரிகள் ஏடிஎம்-ஐ ஆய்வு செய்துள்ளனர். ஆய்வு செய்தபோது, வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க முடியாத படி ஏடிஎம் நம்பர் லாக் செய்யப்பட்டுள்ளதை கண்டுபிடித்தனர். இதையடுத்து வங்கியின் உயர் அதிகாரிகள், ஏடிஎம் நிபுணர்கள் வந்து ஏடிஎம்மில் உள்ள ரகசிய கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது அந்த ஏடிஎம்க்கு நம்பர் பிளேட் இல்லாத ஒரு காரில் வந்த நான்கு மர்ம நபர்கள்
ஏடிஎம் நம்பரை லாக் செய்ததை கண்டுபிடித்தனர்.
நம்பர் சிஸ்டத்தை உபயோகித்து முதல் நாளில் ரூ.8,17,200 பணமும், மறு நாள் காலை
9:40 மணிக்கு, ரூ.4,86,000 பணமும், மொத்தம் ரூ.13,03,200 கொள்ளையடித்து சென்றிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்த வங்கியின் மேலாளர், தாம்பரம் மாநகர காவல் ஆணையரகத்தில் புகார் செய்தார். உடனடியாக காவல் ஆணையர், மணிமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அதோடு அந்த ஏடிஎம்மில் பதிவாகியிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் இந்த ஏடிஎம் வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டுள்ள மர்ம ஆசாமிகள் வங்கியின் ரகசிய கோடு நம்பர், பின் எண் ஆகியவைகள் தெரிந்து அவைகளை பயன்படுத்தி இந்த சம்பவம் நடந்துள்ளதால், வங்கியோடு தொடர்புடையவர்கள் தான் இந்த சம்பவத்தில் ஈடுபட்டு இருக்க வேண்டும் என்று போலீசார் கருதுகின்றனர். இது சம்பந்தமாக பல தரப்பிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது சம்பந்தமாக தாம்பரம் மாநகர காவல் ஆணையரகம் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.