"ஊரக வேலை உறுதித் திட்டத்தில் ரூ.1251 கோடியை மக்களுக்கு பெற்றுத் தர வேண்டும்" - அன்புமணி ராமதாஸ்!
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், "தமிழ்நாட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்படி முடிக்கப்பட்ட பணிகளுக்கு இன்று வரை ரூ.1251.39 கோடி ஊதியம் வழங்கப்படாமல் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது. ஏழை மக்களுக்கு வாழ்வாதாரம் வழங்குவதற்கான இந்தத் திட்டத்தில், வழக்கத்தை விட மிகக் குறைந்த நாள்களே வேலை வழங்கி விட்டு, அதற்கான ஊதியத்தை உடனடியாக வழங்காமல் திமுக அரசு காலம் தாழ்த்துவது கண்டிக்கத்தக்கது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்படி, கிராமப்புறங்களைச் சேர்ந்த ஏழைக் குடும்பங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் அதிகபட்சமாக 100 நாள்கள் வேலை வழங்கப்பட்டு வருகிறது. வேலைக்கான ஊதியம், நிர்வாகச் செலவு ஆகியவற்றை மத்திய அரசு முழுமையாக ஏற்றுக்கொள்ளும் நிலையில், மூலப் பொருள்கள் மற்றும் திறன்பெற்ற பணியாளர்களின் ஊதியத்தை மத்திய மாநில அரசுகள் 75:25 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொள்கின்றன. இந்தத் திட்டத்தின்படி 2024 - 25ஆம் ஆண்டில் முடிக்கப் பட்ட பணிகளுக்காக ரூ.273.91 கோடி ஊதிய நிலுவை வழங்கப்பட வேண்டியுள்ளது. நாகை, மயிலாடுதுறை தவிர மீதமுள்ள அனைத்து மாவட்டங்களிலும் நிலுவைத் தொகை வழங்கப்படவேண்டியுள்ளது. அதிக அளவாக கோவை மாவட்டத்திற்கு ரூ.39.96 கோடியும், கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு ரூ.31.05 கோடியும், கடலூர் மாவட்டத்திற்கு ரூ.27.23 கோடியும் வேலை உறுதித் திட்ட பணியாளர்களுக்கும் ஊதியம் பாக்கி வைக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல், 2025&26ஆம் ஆண்டில் இதுவரை முடிக்கப்பட்ட பணிகளுக்காக ரூ.977.48 கோடி பாக்கி வைக்கப் பட்டுள்ளது. இதிலும் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு ரூ.81.74 கோடி, திருவண்ணாமலை மாவட்டத்திற்கு ரூ.79.42 கோடி, சிவகங்கை மாவட்டத்திற்கு ரூ.69.96 கோடி வீதம் ஊதியம் வழங்கப் படவேண்டியுள்ளது. இந்த அளவுக்கு ஊதியம் நிலுவை வைக்கப்பட்டிருப்பதற்கு, ஊரக வேலை உறுதித் திட்ட ஒதுக்கீட்டில் தமிழகத்திற்குரிய பங்கை மத்திய அரசிடமிருந்து தமிழக அரசு பெறத்தவறியது தான் காரணம்.
ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் தமிழ்நாட்டிற்கு 12 கோடி மனித வேலை நாள்கள் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இது கடந்த காலங்களில் ஒதுக்கப்பட்டதை விட மிகவும் குறைவு. 2020&21 ஆண்டில் 33.39 கோடி, 2021&22ஆம் ஆண்டில் 34.57 கோடி, 2022&23ஆம் ஆண்டில் 33.46 கோடி, 2023&24ஆம் ஆண்டில் 40.87 கோடி, 2024&25ஆம் ஆண்டில் 30.61 கோடி மனித நாள்கள் வேலை வழங்கப்பட்ட நிலையில், அவற்றில் மூன்றில் ஒரு பங்கு அளவுக்கு தான் இந்த முறை தமிழகத்திற்கு வேலை நாள்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. ஆட்சிக்கு வந்தால் மத்திய அரசை வலியுறுத்தி தமிழ்நாட்டு மக்களுக்கு 150 நாள்கள் வேலை பெற்று தருவோம் என்று 2021&ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வாக்குறுதி அளித்திருந்த திமுக, மனித வேலை நாள்கள் குறைக்கப்பட்டிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்க வேண்டும். ஆனால், இதற்காக மத்திய அரசுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.
தமிழ்நாட்டில் இதுவரை வேலை செய்தவர்களுக்கு ஊதிய பாக்கி வைக்கப்பட்டிருப்பது ஒருபுறமிருக்க, ஊரக வேலை உறுதித் திட்ட பயனாளிகளுக்கு மிகக் குறைந்த நாள்கள் மட்டுமே வேலை வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஊரக வேலைத் திட்டத்தில் பணி கோரி பதிவு செய்தவர்களில் 75.08 லட்சம் பேருக்கு தொடர்ச்சியாக வேலை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், நடப்பாண்டில் வெறும் 50.39 லட்சம் பேருக்கு மட்டும் தான் இதுவரை வேலை வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 25 லட்சம் குடும்பங்களுக்கு ஒரு நாள் கூட வேலை வழங்கப்படவில்லை.
தொடர்ந்து பணி செய்யும் அனைவருக்கும் பணி வழங்கப்பட்டால், இதுவரை 13.90 நாள்கள் மட்டுமே வேலை கிடைத்திருக்கும். நடப்பு நிதியாண்டு முடிவடைய இன்னும் 5 மாதங்கள் இருக்கும் நிலையில், இன்னும் இரு நாள்கள் மட்டுமே வேலை வழங்க முடியும். கடந்த ஆண்டுகளில் அதிகபட்சமாக 3.97 லட்சம் குடும்பங்களுக்கு 100 நாள் வேலை வழங்கப்பட்ட நிலையில், நடப்பாண்டில் 2,698 பேருக்கு மட்டுமே 100 நாள்கள் வேலை வழங்கப்பட்டுள்ளது. கூடுதல் வேலை நாள்களை ஏற்படுத்த திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் கிராமப்புற மக்களின் வறுமையைப் போக்கி வாழ்வாதாரத்தை ஏற்படுத்தும் திட்டம் ஆகும். ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு 150 நாள்கள் வேலைவாய்ப்பு வழங்குவோம் என்று வாக்குறுதி அளித்து ஆட்சியைப் பிடித்த திமுக, வெறும் 13.90 நாள்கள் மட்டும் தான் வேலை வழங்கியுள்ளது. அதிகபட்சமாக சராசரியாக 15.98 நாள்களுக்கு மேல் வேலை வழங்க வாய்ப்பே இல்லை. 150 நாள்கள் வேலைவழங்குவதாக வாக்குறுதி அளித்து விட்டு, அதில் 10% அளவுக்குக் கூட வேலை வழங்க நடவடிக்கை எடுக்காததற்காக ஆளும் திமுக அரசு தலைகுனிய வேண்டும்.
தமிழ்நாட்டுக்கு நடப்பாண்டில் வெறும் 12 கோடி மனித நாள்கள் மட்டுமே வேலை வழங்கப்பட்டதற்கு நான் கண்டனம் தெரிவித்தேன். மேலும் குறைந்தது 50 நாட்கள் வேலை வழங்க 43 கோடி மனித நாட்கள் வேலை தேவைப்படுவதால், அதற்குத் தேவையான நிதியை ஒதுக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்தேன். ஆனால், மாநில அரசின் உரிமைகளை வென்றெடுக்க போராடுவதாக முழங்கி வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இதற்காக மத்திய அரசுக்கு கடிதம் கூட எழுதவில்லை.
திமுகவின் முகமூடிகள் ஒவ்வொரு நாளும் கிழிந்து தொங்குகின்றன. திமுக மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பே இல்லை. எனினும் திமுக ஆட்சியில் செய்யப்பட்ட பணிகளுக்கான ஊதியத்தைப் பெற்றுத்தர வேண்டியது அரசின் கடமை. அந்தக் கடமையை நிறைவேற்றும் வகையில் ஊரக வேலை உறுதித் திட்ட பணியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதிய நிலுவையை மத்திய அரசிடமிருந்து திமுக அரசு பெற்றுத் தர வேண்டும்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.