தமிழ்நாட்டைப் போல் புதுச்சேரியிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.1000! புதுச்சேரி பட்ஜெட்டில் அறிவிப்பு!
அரசு பள்ளிகளில் 6-12ம் வகுப்பு வரை படித்து கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு மாதம் தோறும் ரூ.1000 மூன்று ஆண்டுகளுக்கு வழங்கப்படும் என புதுச்சேரி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் புதுச்சேரியில் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. அதற்குப் பதிலாக அரசின் 5 மாத செலவினத்துக்கு ரூ.4,634 கோடிக்கு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், புதுச்சேரியில் 2024-2025 ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட் இன்று (ஆகஸ்ட் 2ம் தேதி) தாக்கல் செய்யப்பட்டது. நிதித்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அதில் ரூ. 12,700 கோடிக்கான நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டன. அதன்படி பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி பட்ஜெட் உரையில் தெரிவித்ததாவது:
- பள்ளி மாணவர்களுக்குக் காலணி மற்றும் புத்தகப்பை வழங்கப்படும்.
- மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை ரூ.6,500லிருந்து 8,000 ரூபாயாக உயர்த்தப்படும்.
- மழைக்கால நிவாரணத் தொகை ரூ.3,000லிருந்து 6,000 ரூபாயாக உயர்த்தப்படும்.
- இந்த ஆண்டு முதல் ரேஷன் கடைகள் திறக்கப்பட்டு விலையில்லா அரிசி, மானிய விலையில் பருப்பு வகைகள், சர்க்கரை, சமையல் எண்ணெய் ஆகியவை மீண்டும் வழங்கப்படும்.
- ரேஷன் அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், புதிய அட்டைக்கு இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்படும்.
- 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நீட் தேர்வுக்குத் தயாராக உதவுவதற்குப் பயிற்சி மையம் அமைக்கப்படும்.
- பொதுத்தேர்வுகளில் முதல் 3 இடங்களைப் பெறும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்.
- அதேபோல பாடங்கள் வாரியாக நூற்றுக்கு நூறு என முழு மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கு ரூ.5,000 ஊக்கத்தொகை வழங்கப்படும்.
இதையும் படியுங்கள் : மேலவளவு கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட குற்றவாளி – உத்தரவை திரும்ப பெற உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!
- அரசுப் பள்ளியில் 6 வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவ, மாணவியர் கல்லூரி படிப்பைத் தொடர மாதந்தோறும் ரூ.1,000 ரூபாய் 3 ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும்.
- ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவியர் மற்றும் பணிபுரியும் மகளிருக்கு இருசக்கர வாகனம் வாங்க 500 பேருக்கு தலா ரூ.1 லட்சம் வரை நிதி உதவி வழங்கப்படும்.
- காரைக்காலில் உள்ள தலைமை பொது மருத்துவமனைக்கு புதிய கட்டடம் கட்டப்படும்.
- காரைக்காலில் பழமையான அருங்காட்சியகம் அமைக்கப்படும்”
இவ்வாறு பல்வேறு அறிவிப்புகளை முதலமைச்சர் ரெங்கசாமி வெளியிட்டார்.