Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1000 - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

12:37 PM Jan 05, 2024 IST | Jeni
Advertisement

பொங்கல் பரிசாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 ரொக்கம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Advertisement

தமிழ்நாடு மக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில்,  ஆண்டுதோறும் ரேசன் கடைகளில் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், வருகிற பொங்கல் பண்டிகைக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு ஆகியவை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு முன்னதாக அறிவித்தது.

அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள்,  இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.  ஆனால் பொங்கல் பரிசாக ரொக்கம் வழங்கப்படுவது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

பொங்கலுக்கு ரூ.1000 வழங்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும்,  பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோரும்,  ரூ.3000 வழங்க வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் தமிழ்நாடு அரசை வலியுறுத்தினர். பொதுமக்களும் பொங்கல் பரிசாக ரொக்கம் வழங்க வேண்டும் என்று எதிர்பார்ப்பை முன்வைத்தனர்.

இந்நிலையில்,  பொங்கல் பரிசுத் தொகுப்புடன் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.  மத்திய மாநில அரசு ஊழியர்கள்,  வருமான வரி செலுத்துவோர்,  பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிவோர், சர்க்கரை அட்டைதாரர்கள்,  பொருளில்லா அட்டைதாரர்கள் தவிர்த்து,  ஏனைய குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் 1,000 ரூபாய் பொங்கல் பரிசாக ரேசன் கடைகளில் பொங்கல் திருநாளுக்கு முன்னதாக ரொக்கமாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மேலும்,  பொங்கல் திருநாளை முன்னிட்டு ஒவ்வொரு மாதமும் 15 ஆம் தேதி வழங்கப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையினை,  இந்த மாதம் பொங்கல் திருநாளுக்கு முன்னதாக,  வரும் 10 ஆம் தேதியன்றே,  1 கோடியே 15 லட்சம் மகளிரின் வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

Tags :
CMOTamilNaduMKStalinPongalPongalGiftrationRs.1000TNGovt
Advertisement
Next Article