Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"100 நாள் வேலை திட்டத்தில் தினசரி ரூ.100 போதாது" - பிரேமலதா விஜயகாந்த்!

'உள்ளம் தேடி இல்லம் நாடி' என்ற சுற்றுப்பயணத்தின் இரண்டாவது நாள் பயணம் மேற்கொண்ட பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
03:54 PM Aug 04, 2025 IST | Web Editor
'உள்ளம் தேடி இல்லம் நாடி' என்ற சுற்றுப்பயணத்தின் இரண்டாவது நாள் பயணம் மேற்கொண்ட பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
Advertisement

தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் "உள்ளம் தேடி இல்லம் நாடி" என்ற சுற்றுப்பயணத்தின் இரண்டாவது நாள் பயணம், ஆவடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பட்டாபிராமன் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அங்கு செய்தியாளர்களைச் சந்தித்து, கூட்டணி, கட்சி பலப்படுத்துதல், விஜயகாந்தின் மகன்களின் எதிர்காலம் என பல்வேறு விஷயங்கள் குறித்து அவர் பேசினார்.

Advertisement

தேமுதிக யாருடன் கூட்டணி அமைத்துக் கொள்கிறதோ, அவர்கள் மகத்தான வெற்றி பெறுவார்கள் என்று பிரேமலதா விஜயகாந்த் உறுதியாகக் கூறினார். ஆனால், தற்போதைக்கு கூட்டணி பற்றி எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை என்றும், முதலில் தங்கள் கட்சியை வலுப்படுத்தும் பணியில் கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

வரும் ஜனவரி 9-ஆம் தேதி கடலூரில் ஒரு மாபெரும் மாநாடு நடத்த இருப்பதாகவும், அந்த மாநாட்டில் கூட்டணி குறித்து முக்கியமான அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார். மேலும், "எங்கள் தெய்வம் கேப்டன் அவர்களின் அருளோடு, நிச்சயம் ஒரு பெரிய கூட்டணியை அமைப்போம்" என்று பிரேமலதா விஜயகாந்த் நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் அரசியல் விமர்சனங்களுக்குப் பதிலளித்த அவர், "நாங்கள் 2019-இல் NDA கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டோம். நான் தமிழ்நாடு முதலமைச்சரை சந்தித்ததைப் பற்றி தமிழிசை சௌந்தரராஜன் நாங்கள் துரோகம் செய்வதாகச் சொல்வது அர்த்தமற்றது. அவர் எங்களுடைய தோழிதான், இதை நான் பெரிதாக எடுத்துக்கொள்ள விரும்பவில்லை" என்றார்.

கேப்டன் விஜயகாந்தின் இரண்டு மகன்களில், பெரியவர் அரசியல் துறையிலும், இளையவர் சினிமா துறையிலும் ஈடுபட்டுள்ளதாகவும், அவர்கள் இருவரும் நிச்சயம் வெற்றி பெறுவார்கள் என்றும் பிரேமலதா கூறினார். அவர்கள் இருவரும் தங்கள் தந்தையின் கனவுகள் அனைத்தையும் நிறைவேற்றுவார்கள் என்றும் தெரிவித்தார்.

அரசு திட்டங்கள் குறித்து பேசியபோது, "100 நாள் வேலை திட்டத்தில் தினசரி 100 ரூபாய் வைத்துக் கொண்டு, தொழிலாளர்கள் என்ன செய்ய முடியும்?" என்று பிரேமலதா கேள்வி எழுப்பினார். மேலும், "யார் எங்கு பிறந்தார்களோ அங்குதான் அவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை கொடுக்க வேண்டும்" என்றும் அவர் வலியுறுத்தினார்.

Tags :
AllianceTalksDMDKPremalathaVijayakanthPressMeettamilnadupoliticsUlumThediIllamNadi
Advertisement
Next Article