சென்னை மெரினா கடற்கரையில் ரூ. 1.8 கோடி மதிப்புடைய போதைப்பொருள் பறிமுதல்!!
சென்னை மெரீனா கடற்கரையில் ரூ. 1.8 கோடி மதிப்புடைய போதைப்பொருளுடன் சுற்றியவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னையை அடுத்த தாம்பரம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் போதைப்பொருள் விற்பனை நடப்பதாக சங்கர் நகர் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் முடிச்சூரைச் சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் தான் விற்பனை செய்து வருகிறார் என்பது தெரிந்தது.
தொடர்ந்து, செல்போன் சிக்னலை வைத்து மெரினா கடற்கரையில் வைத்து
சூரியமூர்த்தியை சங்கர் நகர் போலீசார் கைது செய்தனர். மேலும் அவரது கைப்பையில்
இருந்து மெத்தம்பேட்டமைன் என்ற போதைப்பொருள் 5.800 கிலோ கிராம் பறிமுதல்
செய்யப்பட்டது.
விசாரணையில் கொடுங்கையூரை சேர்ந்த யூனஸ் என்பவரிடமிருந்து தான்
மெத்தம்பேட்டமைன் போதைப்பொருளை வாங்கி சூரியமூர்த்தி மற்றும் அவரது நண்பர்கள் தாம்பரம், பழைய மகாபலிபுரம், கிழக்கு கடற்கரை சாலை, திருவல்லிக்கேணி மற்றும் மயிலாப்பூர் ஆகிய இடங்களில் உள்ள ஐடி ஊழியர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து தலைமறைவான யூனஸ், முகமது ரபீக்கை சங்கர் நகர் போலீசார் தேடி
வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்டுள்ள மெத்தம்பேட்டமைன் போதைப்பொருளின் சர்வதேச மதிப்பு ரூ. 1.8 கோடி இருக்கும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.