விடுமுறை முடிந்து ஊர் திரும்பியவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி - ரூ.1.20 கோடி ஃபோன் பில்... என்ன நடந்தது?
அமெரிக்காவின் புளோரிடாவைச் சேர்ந்த ஜோடிக்கு அவர்கள் பயன்படுத்தும் மொபைல் நிறுவனத்திடம் இருந்து திகைக்க வைக்கும் அளவிற்கு கட்டணம் செலுத்தும்படி, பில் வந்துள்ளது. என்ன நடந்தது என பார்க்கலாம்...
அமெரிக்காவின் புளோரிடாவைச் சேர்ந்த ஜோடிக்கு அதிர்ச்சியூட்டும் பில் ஒன்று அவர்கள் பயன்படுத்தும் மொபைல் ஃபோன் ஆபரேட்டரிடமிருந்து வந்துள்ளது. அந்த பில்லில் ரூ.1.20 கோடி செலுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ரெனே ரெமண்ட் மற்றும் அவரது மனைவி லிண்டா ஜோடி, விடுமுறையை மகிழ்ச்சியுடன் கழிப்பதற்காக, சுவிட்சர்லாந்திற்குச் சென்றுள்ளனர்.
அங்கு தங்கி, விடுமுறையை கழித்துவிட்டு ப்ளோரிடாவுக்கு, திரும்பிய அவர்களுக்கு பெரிய அதிர்ச்சியாக, அவர்கள் சுவிட்சர்லாந்தில் பயன்படுத்திய டேட்டா மற்றும் ரோமிங் கட்டணமாக, டீ மொபைல் ஆப்பரேட்டரிடமிருந்து $143,000 டாலர், செலுத்த வேண்டி, ஃபோன் பில் வந்துள்ளது. அதாவது இந்திய மதிப்பிற்கு சுமார் ரூ.1.20 கோடி. மொபைல் ஃபோன் பில்லின்-படி, ஐரோப்பாவில் இருந்தபோது 9.5 ஜிபி டேட்டாவை ரெனே பயன்படுத்தியுள்ளார். 5 - 10 ஜிபி டேட்டா ஒன்றும் பெரிய தொகை இல்லை என்றாலும், ரோமிங் கட்டணத்தால் இவ்வளவு தொகை வந்துள்ளது என்று கூறப்படுகிறது.
புளோரிடா தம்பதியினர் தாங்கள் விடுமுறையில் இருந்த போது ஏராளமான ஃபோட்டோக்களை எடுத்து அவர்கள் தங்கி இருந்த சுவிட்சர்லாந்திலிருந்து, நாட்டிற்கு வெளியே உள்ள தங்களின் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொண்டனர் என்றும், இதனால் இந்த பில் வந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. டீ மொபைல் ஆப்பரேட்டரிடம் இருந்து வந்த ஃபோன் பில் புளோரிடா தம்பதியை திகைக்க வைத்தது.
இதற்கு முன்பு அவர்கள் சுவிட்சர்லாந்துக்குச் சென்று வந்திருக்கின்றனர். ஆனால் இதுபோல் இதற்கு முன் நடந்ததில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும் ரெனே, அந்த மொபைல் ஃபோன் ஆப்பரேட்டருடன் நேரில் சென்று பேசிய பின்பும், அவர்கள் ரோமிங் கட்டணத்தை குறைக்கவில்லை என்று கூறப்படுகிறது. டீ மொபைல் ஆப்பரேட்டரிடம் இருந்து வந்த பில் உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, ரெனே தனது தரப்பில் வாதிக்க ஒரு வழக்கறிஞரை நியமித்துள்ளார். அவரது வழக்கறிஞர் டி-மொபைலின் தலைவருக்கு ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளார், அதற்கு அவர்களிடமிருந்து இன்னும் பதில் வரவில்லை என்று கூறப்படுகிறது.