#RRvsLSG : 82 ரன்கள் குவித்த சஞ்சு சாம்சன் - லக்னோ அணி வெற்றி பெற 194 ரன்கள் இலக்கு!
லக்னோ அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 193 ரன்கள் சேர்த்தது. இதனால் லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணிக்கு 194 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடரின் 17வது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 3 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று (மார்ச் 24) இரண்டு லீக் போட்டிகள் நடைபெறுகிறது. இதில், முதல் போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கே. எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில், பிற்பகல் 3.30 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது. இரண்டு அணிகளும் நடப்பு தொடரை வெற்றியுடன் தொடங்க முனைப்பு காட்டுவதால், இந்த போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது. லக்னோவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்ய தீர்மானித்து ஆட்டத்தை தொடங்கியது.
ராஜஸ்தான் அணியின் இன்னிங்ஸை ஜெய்ஸ்வால் மற்றும் ஜாஸ் பட்லர் தொடங்கியுள்ளனர். போட்டியின் இரண்டாவது ஓவரில் இரண்டு பவுண்டரி விளாசிய பட்லர், அதே ஓவரின் கடைசி பந்தில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். 10.2 ஓவர்களில் 2 விக்கெட்டினை இழந்து 95 ரன்கள் சேர்த்திருந்தது.
29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்து இயான் பராக் தனது விக்கெட்டினை நவீன் பந்தில் இழந்து வெளியேறினார். அதிரடி ஆட்டக்காரர் ஹெட்மயர் தனது விக்கெட்டினை 7 பந்துகளில் 5 ரன்கள் மட்டும் எடுத்த நிலையில் ரவி பிஷ்னாய் வீசிய 17வது ஓவரில் இழந்து வெளியேறினார்.
இறுதியாக லக்னோ அணிக்கு எதிராக 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 193 ரன்கள் சேர்த்தது. கேப்டன் சஞ்சு சாம்சன் 52 பந்துகளில் 3 பவுண்டரி 8 சிக்ஸர் விளாசி 82 ரன்கள் விளாசினார். ராஜஸ்தான் அணியின் கேப்டனாக உள்ள சஞ்சு சாம்சன் கடந்த 2020ஆம் ஆண்டு முதல் தனது முதல் போட்டியில் அரைசதம் விளாசி வருகின்றார். இதுவரை அவர் ஐபிஎல் தொடரில் 21 அரைசதங்கள் விளாசியுள்ளார்.